மகளின் திருமண ஏற்படுகளை கவனிக்க ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் (சிறைவிடுப்பு) நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 28 ஆண்டுகளாக தான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட தனக்கு வழங்கப்படவில்லை எனவும், தன்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டி காட்டியுள்ளார்.
20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட, ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி தன்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் உட்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தன் தாத்தா, பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டுமென வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் தான் அளித்த மனு நிலுவையில் உள்ளதாகவும், அதேபோல தன் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றம் இதில் தலையிட்டு தனக்கு ஆறுமாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம். நிர்மல்குமார் அமர்வு. மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 30 நாள் பரோல் (சிறை விடுப்பு) வழங்குவதாகி கடந்த மாதம் 5 ஆம் தேதி உத்தரவிட்டனர். இதனையடுத்து ஜூலை 25 ஆம் தேதி முதல் நளினி சிறை விடுப்பில் உள்ளார்.
இந்நிலையில் மகளின் திருமண ஏற்பாடுகள் இன்னும் நிறைவடையாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஏற்கனவே பரோல் முடியும் நிலையில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி அரசுக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் அந்த மனுவை ஆகஸ்ட் 13ல் நிராகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மகள் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியாததால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க சிறை நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே பரோல் காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளையும் விதிகளையும் மீறியதாக ஏதேனும் புகார்கள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர் இதுவரை எந்த வித புகாரும் இல்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து. பரோலை மேலும் 3 வாரத்திற்கு நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள் ஏற்கனவே பரோல் வழங்கிய போது பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள் படி பரோல் காலத்தில் விதிகளின்படி மனுதரார் செயல்பட வேண்டும் எனவும் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது அல்லது அவர்களை சந்திப்பது, அல்லது அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவர்களை சந்திக்கக் கூடாது. பரோல் காலத்தில் அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மனுதாரரிடம் எந்த கட்டணமும் காவல்துறையும், அரசும் வசூலிக்க கூடாது.
பரோல் காலத்தில் விதிகளை மீறினால் சிறை விடுப்பை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் பரோல் காலம் முடிவடைந்தவுடன் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த மூன்று வார பரோல் வரும் 25 ஆம் தேதி முதல் மூன்று வாரத்திற்கு வழங்குவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.