முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டவர் நளினி.
இவர் உள்பட 6 பேர் வெள்ளிக்கிழமை (நவ.11) உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த நளினி, இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, “சிறையில் தன்னை சந்தித்த போது பிரியங்கா காந்தி கண்ணீர் விட்டு அழுதார். அவர்களிடம் இன்னமும் சோகம் திகழ்கிறது” என்றார்.
தொடர்ந்து, “பிரியங்கா காந்தி என்னை சிறையில் சந்தித்தார்கள். அப்போது அவரின் அப்பா குறித்து கேட்டார். நானும் என்னால் முடிந்ததை சொன்னேன். மீதியெல்லாம் அவரின் தனிப்பட்ட விஷயம். இதை இங்கு விவாதிக்க முடியாது” என்றார்.
பிரியங்கா காந்தி என்னை சந்திக்கும்போது எனக்கும் பயமாக இருந்தது” என்றார்.
மேலும், “அவர் என்னை சந்திக்கும்போதும், அவரின் தந்தை குறித்து கேட்டபோதும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள். அழுதுவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி,நளினியை 2008ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறைச்சாலையில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil