ஆளுநர் காலதாமதம் செய்வதை எதிர்த்து, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு

Nalini to file new petition in HC challenging governor’s delay: ஆளுநர் காலதாமதம் செய்வதை எதிர்த்து, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினி முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி நளினி

செப்டம்பர் 9, 2018 தேதியிட்ட அமைச்சரவை அளித்த பரிந்துரையின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததை எதிர்த்து, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான நளினி, இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலைச் செய்ய, கடந்த 2018 செப்டம்பர் 9 தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் செப்டம்பர் 11 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனையடுத்து, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அறிவிக்க வேண்டும் என்றும், ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில்மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நேற்று (நவம்பர் 30) விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும், ஆளுநர் ஒப்புதல் இல்லாமலும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் நளினி தரப்பில் சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது” என்றார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், கூடுதல் பதில்மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்ததனர்.

இந்தநிலையில், ஆளுநர் காலதாமதம் செய்வதை எதிர்த்து, நளினி, இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளார். நளினியின் வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். நளினியின் விடுதலைக்கு ஆளுநரின் ஒப்புதல் முக்கியமானது என்று நவம்பர் 27 அன்று உயர்நீதிமன்றத்தில் அரசு எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nalini to file new petition in hc challenging governors delay

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com