பணம் கொடுத்து விருது வாங்குகிற காலம் இது! விருதுடன் வழங்கப்பட இருக்கும் பணத்தை மறுக்கிற எண்ணம் எத்தனை பேருக்கு வரும்?
தோழர் நல்லகண்ணு! இடதுசாரி இயக்கத்தில் ஒரு காந்தியவாதி! மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30-ம் தேதி, காந்தியின் பெயரால் வழங்கப்பட இருக்கும் ஒரு விருதுக்கு நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இடதுசாரி அமைப்புகளோ, வேறு பொதுநல அமைப்புகளோ இந்த விருதை வழங்கியிருந்தால் ஆச்சர்யமல்ல! காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்ட முன்னாள் தலைவரான ராயபுரம் மனோ ஏற்பாட்டில் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் பலரும் இணைந்து இந்த விழாவை நடத்துவதுதான் சிறப்பு!
ஒவ்வொரு ஆண்டும் இதேபோல காந்தி பிறந்த நாள் அல்லது நினைவு நாளையொட்டி விருது நிகழ்ச்சிகளை நடத்துவது மனோவுக்கு வழக்கம்! ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்களான குமரி அனந்தன், யசோதா, கோபண்ணா ஆகியோர் அவரது ஏற்பாட்டில் விருது பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டு காந்தி பிறந்த நாளையொட்டி, காந்தி மற்றும் காமராஜர் தொடர்பான சினிமாப் படங்களை எடுத்தவரான பாலகிருஷ்ணனை அழைத்து விருது கொடுத்தார்கள்.
இந்த ஆண்டு யாரை அழைப்பது? என யோசித்தபோது, நல்லுகண்ணுவை முடிவு செய்தார்கள். வெவ்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்தவர்தான் நல்லகண்ணு. ஆனாலும் மதுவுக்கு எதிரான போராட்டம், இயற்கை வளங்களை பாதுகாக்க 80 வயதைக் கடந்த நிலையிலும் களத்தில் இறங்கி நிற்கும் பாங்கு, பொது வாழ்வில் அப்பழுக்கற்ற செயல்பாடு ஆகியவற்றுக்காக மாற்றுக் கட்சியில் இருந்தாலும் நல்லகண்ணுவை கவுரவிக்க முடிவு செய்தனர்.
காந்திஜி விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் நல்லகண்ணுவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. நல்லகண்ணுவை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதற்காக தொடர்புகொண்டு கேட்டபோது, முதலில் தயங்கியிருக்கிறார். காங்கிரஸ் பிரமுகர்கள் தொடர்ந்து வற்புறுத்தவும், ‘அந்தப் பணத்தை மட்டும் (ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி) தவிர்த்துடுங்களேன்’ என வேண்டினாராம்.
நிகழ்ச்சி அமைப்பாளர்களோ, ‘உங்களை வெறுமனே அழைத்து பெயரளவில் ஒரு விருதை மட்டும் தந்து அனுப்பினால், உங்களை கவுரவித்த திருப்தி எங்களுக்கு கிடைக்காது’ என விடாமல் வற்புறுத்தினர். கடைசியில், ‘நான் வாங்குகிற விருதையோ, பணத்தையோ எனக்கு வச்சுக்கிறதில்லை’ எனக் கூறி ஒரு வழியாக விருதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவருக்கு ஒரு கோடி பண முடிப்பு கொடுத்தார்கள். அதை கட்சிக்கே அவர் திருப்பிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிதியையும் பொதுப் பயனுக்காக அவர் கொடுத்துவிடக்கூடும்.
நல்லகண்ணுவை நமது தேர்தல் ஜனநாயகம் பெரிதாக கவுரவப் படுத்திவிடவில்லை. இது போன்ற நிகழ்ச்சிகள் சற்றே ஆறுதல் அளிக்கக் கூடியவை!
(காந்திஜி விருது வழங்கும் விழா, ஜனவரி 30-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை, ராயபுரத்தில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மக்கள் விழிப்புணர்வு பயிலரங்கத்தில் நடக்கிறது. பீட்டர் அல்போன்ஸ், ராயபுரம் மனோ உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டு நல்லகண்ணுவுக்கு விருது வழங்குகிறார்கள்)