scorecardresearch

சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர், விடுதலை போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு தமிழக அரசால் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற விருது கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல்கொடுத்து, சமூக நல்லிணக்கத்திணையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு 2022ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க தேர்வு குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தகைசால் தமிழர் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லகண்ணுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த விருது மற்றொரு மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nallakannu to get tamil nadu governments thagaisal thamizhar award

Best of Express