விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி கள் விடுதலை மாநாடு நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கம் இருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாநாட்டின் நோக்கம் குறித்து நல்லசாமி குறிப்பிட்டுள்ளார். அதில், "கலப்படம் என்பதை காரணம் காண்பித்து கள் இறக்கும் உரிமையை தமிழ்நாடு அரசு பறித்துக் கொண்டது. அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை கிடையாது. ஆனால், தமிழ்நாடு அரசு மட்டும் கலப்படத்தை தடுக்க முடியாது என்பது போல் கூறுகிறது.
இந்த மாநாட்டில் கள் சந்தைப்படுத்தப்படும். அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் கள் இறக்குகிறோம். எங்கள் மீது மது விலக்கு சட்டப்படி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இந்த போராட்டம் பெரும் வெற்றி பெரும் என நம்புகிறோம். இந்த போராட்டத்திற்கு சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வருகை தருகின்றனர். மேலும் பல தலைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே, கள் இறக்குவதில் தனக்கு உடன்பாடு உண்டு என சீமான் கூறியுள்ளார். நாங்கள் கொடுக்கும் கள்ளை வாங்கி குடிப்பதாக சீமான் முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக இந்த நிகழ்வு தள்ளிப்போனது.
எனினும், இந்த மாநாட்டின் மேடையில் எங்களிடம் இருந்து கள்ளை வாங்கி குடிப்பதாக சீமான் தற்போது உறுதியாக தெரிவித்துள்ளார்" என்று நல்லசாமி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, கள் இறக்குவதற்கு சீமான் தனது ஆதரவை கூறி வரும் நிலையில், மாநாடு மேடையிலேயே கள் குடித்து போராட்டத்தை சீமான் தொடங்கவுள்ளது பேசுபொருளாகியுள்ளது.