நாமக்கலில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்துக் கொண்டிருந்த அர்ச்சகர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர்:
இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அப்படித்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் விஷேச பூஜைகளுடன் கோயில் பரபரப்பாக இருந்தது.
அந்த நேரத்தில் பக்தர் ஒருவர், சாமிக்கு துளசி மாலையை அணிவித்து பூஜை செய்து தரும்படி கேட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் உடனே மாலையை வாங்கி 18 அடி உள்ள ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்கு 11 அடி உயர நடைமேடை மீது ஏறி மாலை அணிவித்தார்.
அப்போது வெங்கடேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேஷ் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற அர்ச்சக்ர்கள் உடனே அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபாயக்கட்டத்தில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர், சிகிக்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 53. வெங்கடேஷ் தன் சகோதரர் நாகராஜனுக்கு உதவி அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார், கோயில் அர்ச்சகர் சம்பளப் பட்டியலில் இவர் பெயர் இல்லை. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.