நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் விஜய். இவரைத் தேடி மாவட்ட ஆட்சியரே வகுப்பறைக்கு வந்து, "விஜய் யாரு?" எனக் கேட்டது ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்த முழு விவரம் இதோ:
மாணவனின் கடிதம்!
சமீபத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற துர்கா மூர்த்திக்கு, மாணவன் விஜய் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "நீங்கள் ஒரு எளிமையான குடும்பத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பணிக்கு எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை அறிந்தேன். எனவே தாங்கள் எங்கள் பள்ளிக்கு வரவேண்டும். 'மழைக்காக காத்திருக்கும் பயிர்களை போல, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்...'" என மிகவும் உருக்கமாகவும், ஆவலுடனும் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆட்சியரின் உடனடி நடவடிக்கை!
மாணவனின் இந்த அன்பான கடிதத்தைப் படித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உடனடியாக நெகிழ்ந்து போனார். பொறுப்பேற்ற இரண்டாம் நாளே இந்த கடிதம் அவருக்குக் கிடைத்திருந்தது. மாணவனின் கோரிக்கையை ஏற்று, எருமப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். அப்போது தனக்குக் கடிதம் எழுதிய மாணவன் விஜயின் நினைவு வரவே, எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அந்த மாணவனின் வகுப்பறையில் நுழைந்தார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/17/whatsapp-image-2025-2025-07-17-15-21-00.jpeg)
"இங்கு யாரு விஜய்...?"
வகுப்பறைக்குள் நுழைந்ததும், ஆட்சியர் துர்கா மூர்த்தி அங்கிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்த்து, "யார் விஜய்?" என்று கேட்டார். எதிர்பாராத இந்த வருகையால் வியந்துபோன ஆசிரியர்களும் மாணவர்களும், விஜயைக் காட்டினர். பின்னர், அந்தக் கடிதத்தைக் காட்டி, "எவ்வாறு என்னைப் பற்றித் தகவல் தெரியும்?" என்று ஆட்சியர் கேட்க, உடனடியாக விஜய், "வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது" எனத் தெரிவித்தார்.
மாணவனைப் பாராட்டி பரிசு வழங்கிய ஆட்சியர்!
இதையடுத்து, ஆட்சியர் துர்கா மூர்த்தி, தன்னைப் பற்றி மாணவன் விஜய் எழுதியிருந்த கடிதத்தைச் சக மாணவர்களுக்குப் படித்துக் காட்டினார். பின்னர், மாணவன் விஜயுடன் கலந்துரையாடினார். அப்போது, "போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்?" எனக் கேட்க, "ஆங்கிலத்தில் எழுதினேன்" என விஜய் பதிலளித்தார். அதற்கு ஆட்சியர், "ஏன் தாய்மொழியில் எழுத முடியாதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
"தாராளமாக தமிழில் நமது தாய்மொழியில் எழுதலாம். நிறைய இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்றவர்கள் தங்கள் தாய்மொழியில் எழுதியுள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானோர் உள்ளனர்" என்று ஆட்சியர் விளக்கமளித்தார். மேலும், தனது சொந்த அனுபவங்களையும், தான் எவ்வாறு ஆட்சியராக வந்தேன் என்பதையும் மாணவர்களுடன் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார். இந்த கலந்துரையாடல் மாணவர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாணவனின் சிறிய கடிதம், ஒரு மாவட்ட ஆட்சியரை பள்ளிக்கு வரவழைத்து, மாணவர்களுக்கு ஊக்கமளித்த இந்த நிகழ்வு அனைவராலும் பெரிதும் பேசப்படுகிறது.
க.சண்முகவடிவேல்