நாமக்கல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் பாட்டி, பேரன் மற்றும் பேத்தி ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மோகனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவர் அப்பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து பருத்தி, சோளம் சாகுபடி செய்துள்ளார். இன்று தனது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக செல்வம் தனது மனைவி இளஞ்சியம் மற்றும் மகன் வழி பேரன், சுஜித், பேத்தி ஐவிலி ஆகியோருடன் சென்றுள்ளார். மாலை செல்வம் உள்பட நால்வரும் வீடு திரும்பியுள்ளனர்.
விவசாய நிலத்தை ஒட்டிய பாதை ஓரமாக நால்வரும் நடந்து வந்துள்ளனர். அப்போது அங்குள்ள கம்பி வேலியை இளஞ்சியம் மற்றும் பேரன் சுஜித், பேத்தி ஐவிலி ஆகிய மூவரும் தொட்டுள்ளனர். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த மோகனுார் போலீஸார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதில் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்திருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்த 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி பாட்டி, பேரன், பேத்தி ஆகிய மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்