தமிழகம் முழுவதும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வந்த அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் புரோக்கரை நாமக்கல் திருச்செங்கோடு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் பெண்களிடம் குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருந்தால், அவர்களிடம் ரூ.2 லட்சம் வரை பேரம் பேசி, பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த டாக்டர் அனுராதா (49), சாணார்பாளையத்தை சேர்ந்த புரோக்கர் டி.லோகாம்பாள் (38) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சூரியம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.தினேஷ் (29) என்பவரின் மனைவி நாகஜோதி (25). இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகஜோதிக்கு அக்டோபர் 12ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஆனால், நாகஜோதிக்கு பிரசவம் பார்த்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தநிலையில், திருச்செங்கோடு மருத்துவமனையில், தன்னை செவிலியர் என அறிமுகப்படுத்திக் கொண்ட பெண், குழந்தையை விற்றால், 2 லட்சம் ரூபாய் தருவதாக, தம்பதியிடம் கூறியுள்ளார். குழந்தையை விற்க விரும்பாத தினேஷ், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உமா, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் அளிக்கும்படி தினேஷ்க்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பின்னர், புகாரின் பேரில் திருச்செங்கோடு டி.எஸ்.பி இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் லோகம்பாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அரசு மருத்துவமனை மருத்துவர் அனுராதாவின் உதவியுடன் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் இதுவரை ஏழு குழந்தைகளை விற்றதாக லோகம்பாள் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவரும் தானும் சிறுநீரக தானத்துக்கும் ஏற்பாடு செய்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் டாக்டர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகம்பாள் இருவரையும் கைது செய்தனர். இதனிடையே அரசு மருத்துவர் அனுராதாவை பணியிடை நீக்கம் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“