நாமக்கல் மாவட்டத்தில், குறிப்பாக பள்ளிப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், சட்டவிரோத சிறுநீரக விற்பனை மற்றும் திருட்டு தொடர்பான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அண்மையில் வெளிவந்தன. பெரும்பாலும் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் இந்த மோசடி கும்பலால் குறிவைக்கப்பட்டுள்ளனர். பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களின் சிறுநீரகங்கள் சட்டவிரோதமாக அகற்றப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த சிறுநீரக விற்பனை முறைகேடு குறித்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து, அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் சட்டவிரோதமாகப் பெறப்பட்டு விற்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, தமிழ்நாடு மருத்துவ திட்டப் பணிகள் இயக்குநர் வினித் தலைமையில் நான்கு பேர் கொண்ட தனிக்குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. குழுவின் விசாரணையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகாரத்தைப் பெற, மோசடி கும்பல் போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு அங்கீகாரக் குழுவை ஏமாற்றியது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் உள்ள அங்கீகாரக் குழுக்களிடம் அனுமதி பெற வேண்டும். நாமக்கல்லில் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு மதுரை அங்கீகாரக் குழுவிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில், அங்கீகாரக் குழுவில் உள்ள மருத்துவர்கள் தவறு செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், போலியான சான்றிதழ்கள் மூலம் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூர் மற்றும் திருச்சியைச் சேர்ந்த மருத்துவமனைகளில் இந்த அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக் குழு தங்கள் விசாரணையை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
சென்னை சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினரும், நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையிலான மற்றொரு குழுவினரும் இந்த சிறுநீரக விற்பனை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.