நாமக்கல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் நாமக்கல் 16-வது தொகுதி ஆகும். நாமக்கல் மாவட்டம் தென்னிந்தியாவில் கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தியில் முதலிடம் பெற்றது. லாரி பாடிகட்டுதல், பால் பண்னை, நெசவு, ஜவ்வரிசி உற்பத்தி என பல்வேறு தொழில்களும் கோலோச்சும் இடமாக உள்ளது.
2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தொகுதி நீக்கப்பட்டு நாமக்கல் தொகுதி உருவாக்கப்பட்டது. தற்போது நாமக்கல் மக்களவைத் தொகுதியில் சங்ககிரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், பரமத்தி-வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாமக்கல் மக்களவைத் தொகுதி 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2 முறை தி.மு.க, 1 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கொ.ம.தே.க வெற்றி பெற்றது.
நாமக்கல் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,44,036. இதில் ஆண்கள் 7,04,270, பெண்கள் 7,39,610 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 156 பேர் உள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தல்
தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கழகம் போட்டியிடுகிறது. மாதேஸ்வரன் என்பவர் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் தமிழ்மணி, பா.ஜ.க சார்பில் கே.பி.ராமலிங்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார்கள்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்
2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கழகம் (கொ.ம.தே.க) சார்பில் போட்டியிட்ட ஏ.கே.பி.சின்ராஜ் சுமார் 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏ.கே.பி.சின்ராஜ் (6,26,293) வாக்குகள், அதிமுக காளியப்பன் 3,61,142 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் பாஸ்கர் 38,531 வாக்குகள், கமலின் மக்கள் நீதி மய்யம் தங்கவேலு 30,947வாக்குகள் பெற்றனர்.
2014 தேர்தல் முடிவுகள்
இந்த தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.கவின் பி.ஆர்.சுந்தரம் 5,63,272 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.கவின் எஸ்.காந்திசெல்வன் இந்த முறை தோல்வி அடைந்தார். அவர் 2,68,898 வாக்குகளும், தே.மு.தி.கவில் போட்டியிட்ட வேல் 1,46,882 வாக்குகளும் பெற்றனர்.
2009 தேர்தல் முடிவுகள்
தி.மு.கவின் எஸ்.காந்திசெல்வன் 3,71,476 பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவில் போட்டியிட்ட வைரம் தமிழரசி 2,69,045 வாக்குகளும் பெற்றார்.தே.மு.தி.க 79,420 வாக்குகளும், கொ.ம.தே.க 52,433 வாக்குகளும் பெற்றது.
ஜுன் 4: வாக்கு எண்ணிக்கை அப்டேட்ஸ்
ஏப்ரல் 19-ம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. திமுக கூட்டணியில் கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். அதிமுக, பா.ஜ.க நேரடியாக இந்த தொகுதியில் போட்டியிடுகின்றன. வெற்றி வாய்ப்பு இம்முறை யாருக்கு? நாமக்கல் தொகுதி முன்னிலை நிலவரம் குறித்து சற்று நேரத்தில் தெரிய வரும்.
7வது சுற்று முடிவில் திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 8,183 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
முதல் சுற்று எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணி மாதேஸ்வரனை விட 1,089 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். 2ஆவது சுற்றில் மாதேஸ்வரன், அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை விட 2,095 வாக்குகள் அதிகம் பெற்றார். 3வது சுற்றில் 2,189 வாக்குகளும், 4வது சுற்றில் 3,161 வாக்குகளும் முன்னிலையில் இருந்தார். 5வது சுற்றில் 1,817 வாக்குகளும், 6வது சுற்றில் 3,623 வாக்குகளும் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வந்தார்.
7வது சுற்று முடிவில் 6 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து மாதேஸ்வரன் 1,64,753 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழ்மணி 1,56,570 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில், திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 8,183 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
மாலை 7 மணியளவில் 17-வது சுற்று முடிவில், திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 27,726 வாக்குள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். மாதேஸ்வரன் 3,92,286 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தமிழ்மணி 3,64,560 வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில், கொ.ம.தே.க வேட்பாளர் மாதேஸ்வரன் 4,56,681 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
2-வது இடம் பிடித்த அதிமுக 4,27,977 வாக்குகளும், பா.ஜ.க 1,03,356 வாக்குகளும், நாதக 94,724 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.