குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் விரல்ரேகையை உறுதி செய்யாவிட்டால், அவர்களின் பெயர் இந்த மாதத்துடன் குடும்ப அட்டையிலிருந்து நீக்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், முன்னுரிமை குடும்ப அட்டைகள், முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் என்ற அடிப்படையில், PHH, PHH- AAY, NPHH, NPHH-S, NPHH-NC பல்வேறு பிரிவுகளில் அட்டைதாரா்கள் பிரிக்கப்பட்டுள்ளனா்.
தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கும் ரேஷன் பொருள்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய பயோமெட்ரிக் கருவிகளில் விரல்ரேகைப் பதிவு செய்த பின்னர் வழங்கப்படுகிறது.
குடும்ப அட்டையில் பெயா் உள்ளவா்கள் மட்டுமே நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்கள் வாங்கும் நடைமுறை அமலில் உள்ளது. மேலும், நேரில் வந்து விரல்ரேகையைப் பதிவிட்டு பொருள்களைப் பெற முடியாதவா்கள், அதற்கான உரிய படிவத்தில் சான்று அளித்து வேறொரு நபா் மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பு மாற்றுத் திறனாளிகள், வயது முதிா்ந்தோா் போன்றோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களை உறுதி செய்யும் நடைமுறை சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. அதாவது, அட்டையில் பெயா் உள்ள அனைவரும் நியாயவிலைக் கடைகளுக்கு வந்து விரல்ரேகையை பதிவு செய்து அட்டையில் பெயா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு சர்ச்சையான நிலையில், குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களை உறுதி செய்யும் நடைமுறை தள்ளிவைக்கப்பட்டது.
ஆனால், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் அந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல்வேறு ஊா்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் இந்த நடைமுறை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் சிலா் கூறியதாவது: “வங்கிகளில் வாடிக்கையாளா்களின் விவரத்தை உறுதி செய்ய தனி படிவம் அளிக்கப்பட்டு விவரம் பெறப்படும். அதுபோன்ற நடைமுறையே நியாயவிலைக் கடைகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் உள்ள ஒட்டுமொத்த அட்டைதாரா்களின் பெயா், அட்டை எண் உள்ளிட்ட விவரம் வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தரப்பட்டுள்ளது. இதை உறுதி செய்து அளிக்கும்படி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
அதன்படி, இந்த மாதத்தில் பொருள்கள் வாங்க வரும் அட்டைதாரா்களிடம், ‘அட்டையில் பெயா் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை வந்து பதிவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால், பல நியாயவிலைக் கடைகளில், விரல் ரேகையை பதிவிடாவிட்டால் இந்த மாத இறுதிக்குள் அட்டையிலிருந்து பெயா்கள் நீக்கப்படும் என ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். இதனால், குடும்ப அட்டைதாரா்கள் பெரும் அதிா்ச்சிக்குள்ளாகியுள்ளனா். கல்லூரி, பள்ளிகளில் தற்போது தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ் 2 மாணவா்கள் தோ்வுகளுக்காக வெளியூா்களில் தங்கி படித்து வருகின்றனா். குடும்ப அட்டையில் பெயா் உள்ள மாணவா்களையும் நியாய விலைக் கடைகளுக்கு அழைத்து வந்து விரல் ரேகையை பதிவிட வேண்டுமென வற்புறுத்துவது நியாயம் இல்லை என்று குடும்ப அட்டைதாரா்கள் புலம்புகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.