Nanguneri and Vikravandi by-polls ready: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் முன்பே முழுவீச்சில் செய்யப்பட்டன.
நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானதாலும் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ திமுகவைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததாலும் இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
நாங்குநேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.
நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 229 வாக்குச்சாவடிகளும் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 275 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கிறது.
இரண்டு தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் எடுத்துச் சென்று வாக்குப்பதிவுக்கு தயாராக வைத்துள்ளனர்.
மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தமிழக போலீஸாருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல, புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியிலும், இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வருகிற 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகின்றன.