nanguneri by election : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நாங்குனேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வேட்பாளர் பெயரை இன்று அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையம் தலைவர், தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தார். வரும் அக்டோபர் 21 ஆம் தேதி 2தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
திமுக-வை பொருத்தவரையில் விக்கிரவாண்டி தொகுதியில் அக்கட்சியின் சார்ப்பில் நா. புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மற்றொரு தொகுதியான நாங்குனேரி கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு ஒதுக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுக வேட்பாளர் பெயர் ஏற்கனவே வெளியான நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்ற கேள்வி அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்தது.
நாங்குனேரியில் காங்கிரஸ் சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றவர்களுக்கு நேர்க்காணலும் நடத்தப்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினார்கள். இந்த நேர்காணலில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கலந்துக் கொண்டார். இவர், ஏற்கனவே இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று, இப்போது எம்பியாக இருக்கும் வசந்தகுமாரின் அண்ணன் ஆவர்.
நேர்க்காணல் முடிந்தவுடன் இறுதிப்பட்டியல் பெயரை டெல்லி தலைமையகத்திற்கு கே. எஸ் அழகிரி அனுப்பி வைத்துள்ளார். அதில் குமரி அனந்தனர் பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடன் இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாள ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் பெயரும் போட்டியில் இருப்பதாக தெரிகிறது. இவர்களில் இறுதி வேட்பாளர் பெயரை சோனியா காந்தி தேர்வு செய்து கூறுவார் என்று தெரிகிறது.
ஏற்கனவே பட்டியல் டெல்லி சென்றுவிட்ட நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ் அழகிரி கூறியுள்ளார். யார் அந்த வேட்பாளர்? என்ற எதிர்ப்பார்ப்பு தான் தற்போது மேலூங்கியுள்ளது.
இப்போதைய காலகட்டத்திற்கு நாங்குனேரி தொகுதியில் பணத்தை அதிகளவில் செலவு செய்யக்கூடிய வேட்பாளர் தேவை என்பது காங்கிரஸுக்கு நன்கு புரிந்திருக்கும் அப்படி இருக்கையில் காங்கிரஸ் மேலிடம் நாங்குனேரியில் யாரை நிறுத்தும் என்பது குழப்பமாக இருக்கிறது.