Nanguneri assembly election result: நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வான வசந்தகுமார் 2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இதனால், ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது என்பதால் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதே போல, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராதாமணி காலமானதால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் நாராயணன் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணனும் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் அக்டோபர் 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் மொத்தம் 1,70,674 பேர் வாக்களித்தனர். இதன் மூலம், 66.35 சதவீத வாக்குகள் பதிவானது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை வைகித்தார். ஆனால், 9 வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த சுற்றுகள் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தொடர்ந்து முன்னிலை வகித்தார்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனைவிட 33,447 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.தேர்தலில் நாராயணன் மொத்தம் 94,802 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,991 வாக்குகள் பெற்றார். இவரையடுத்து பனங்காட்டுப் படை கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார் 4242 வாக்குகள் பெற்றார். இவரையடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ நாராயணன் 3488 வாக்குகள் பெற்றார்.
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது தொகுதியை இழந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பலம் 122-இல் இருந்து 124 ஆக உயர்ந்துள்ளது.