Nanguneri, People of Ambalam village roundup DMK MLA: நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய சென்ற பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் கிராமத்தினர் அவரை முற்றுகையிட்டு வீட்டில் பூட்டிவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து தேர்தல் பறக்கும்படையினர் ரூ.2.78 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதனால், அங்கே தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. நாங்குநேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள், திமுக எம்.எல்.ஏ-க்கள் என பலரும் பிரசாரம் செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பெரியகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் பகுதியில் மாரியப்பன் என்பவரது விட்டில் தங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று அப்பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்யப்படுவதாக தகவல் பரவியதை அடுத்து பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது வீட்டில் எம்.எல்.ஏ சரவணகுமார் உள்ளிட்ட சிலர் இருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த மூலைக்கரைப் பட்டி அருகே உள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் பணப்பட்டுவாடா செய்யும் அம்பலத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் எம்.எல்.ஏவிடம் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், நீங்கள் எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ் கட்சியினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ சரவணகுமார் உள்பட 4 பேரை சரமாரியாக தாக்கியதில் அவர்கள் காயம் அடைந்தனர். அப்போது அவர்களின் கையில் இருந்த துண்டு பிரசுரங்கள், 2,000 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டினர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர்களிடம் இருந்த ரூ.2.78 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும்படையினரும் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் பற்றி ஊடகங்களிடம் கூறிய எம்.எல்.ஏ சரவணகுமார், அவரும் திமுக தொண்டர்களும் மதியம் அந்த இடத்தில் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கே ஒரு கும்பல் எங்களைத் தாக்கியதாக கூறினார். மேலும், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த பணம், நகை, செல்போனை பறித்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார். தாக்குதலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது புகார் அளிக்க உள்ளதாகவும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
நாங்குநேரி தொகுதியில் இது போல அரசியல் அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம்பறிமுதல் செய்வது இது நான்கவது முறையாகும். இதுவரை ரூ.3,98,700 பணம் பறிமுதல் செய்திருக்கிறோம் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஷில்பா பிரபாகர் சதிஷ், இந்த சம்பவம் குறித்து கிராமத்தினரிடம் இருந்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. பறக்கும்படை சம்பவ இடத்துக்கு சென்று பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அங்கே 139 எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. அந்த வீட்டில் மேலும் பணம் இருந்ததாக புகார் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பறக்கும்படையினருக்கு எந்த இடத்திலும் சென்று சோதனை நடத்த அதிகாரம் கிடையாது. வருமானவரித் துறையினருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் சோதனை நடத்துவதற்கும் விசாரிப்பதற்கு ஒரு அதிகாரியை அமர்த்தியுள்ளனர். மாலையில் அங்கே சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
புகைப்படம்: நன்றி நக்கீரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.