Nanguneri Vikravandi by-elections campaign roundup : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21ம் தேதி நடைபெற இருப்பதை ஒட்டி இவ்விரண்டு தேர்தல் களங்களும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. திமுக தலைவர் முக ஸ்டாலினும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்காக ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.
பிரேமலதா பிரச்சாரம்
அதிமுகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் தங்களின் பிரச்சார பணியை துவங்கியுள்ளன. நாங்குநேரி தொகுதியில் நேற்று ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டா தேமுதிக பொருளாளர் பிரேமலதா. திறந்த வேனில் நின்று கொண்டு பேசிய அவர் “இடைத்தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு திமுக தான் காரணம்” என்றும் பிரச்சாரத்தில் கூறினார்.
முதல்வர் பிரச்சாரம்
விக்கிரவாண்டியில் பேசிய முதல்வர் வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காணை, மாம்பழப்பட்டு, அத்தியூர் திருக்கை உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திமுக தலைவர் மக்களிடம் பொய் மூட்டைகளை அவிழ்த்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார். திருவாமத்தூரில் பேசிய அவர் “கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூட முழுமையான சுகாதாரம் பெற்று வாழ்கிறார்கள் என்றால் அது எங்கள் ஆட்சியில் தான். மத்திய அரசிடம் இருந்து நாங்கள் மேலும் 6 மருத்துவக்கல்லூரிகள் கட்டுவதற்கான அனுமதியை பெற்றுள்ளோம். இந்தியாவில் ஒன்றுமே தெரியாத எதிர்கட்சி தலைவர் இருக்கிறார் என்றால் அது திமுக தலைவர் தான் என்று குற்றம் சுமத்தினார்.
திமுக பிரச்சாரம்
நாங்குநேரி தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முக ஸ்டாலின். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பேசிய அவர் “ரூபி மனோகரன் ஒரு ராணுவ வீரர். நாட்டுக்காக உழைத்தவர். சோனியா மற்றும் ராகுல் காந்தியால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர். நாட்டுக்காக உழைத்த அவர் நிச்சயமாக தன்னுடைய தொகுதி மக்களுக்காகவும் உதவுவார்” என்று அறிமுகம் செய்து வைத்தார். பின்பு அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் ரூபி மனோகரன் குறித்து பேசுகையில் “அவர் மீது நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது” என மேற்கோள் காட்டினார்.
"திமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட தாமிரபரணியாறு, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டு தற்போது அதனை நிறைவேற்றிவிடுவோம் என்று மக்கள் மத்தியில் கண் துடைப்புக்காக பிரச்சாரம் செய்கிறார் முதல்வர்” என்ற குற்றச்சாட்டினை முதலில் முன் வைத்தார் முக ஸ்டாலின். “உள்ளாட்சித் தேர்தல் முறையாக 8 ஆண்டுகளில் நடைபெறாத காரணங்களால் கிராமப்புற மேம்பாடு முற்றிலுமாக செயலிழந்து இருக்கிறது. மத்திய அரசு கிராம மேம்பாட்டு திட்டத்திற்காக அனுப்பப்படும் பணம் என்ன ஆகிறது? என்றும் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியின் போது உள்ளாட்சி நிர்வாகம் எப்படி செயல்பட்டது என்று விளக்கிய அவர் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பெண்களுக்காக சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, பெண்ணின் திருமணத்திற்கு நிதி உதவி போன்ற திட்டங்கள் எப்படி நிறைவேற்றப்பட்டது என்பது குறித்தும் உரையாடினார்.
முத்தலாக் தடை சட்டம் போன்ற மிக முக்கியமான விவகாரங்களில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக முக ஸ்டாலின் நேற்று தன்னுடைய பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். லோக் சபாவில் ரவீந்திரநாத் குமார் முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசினார். ஆனால் அடுத்த நாளே அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து பேசினார். ஆனால் வாக்கெடுப்பின் போது அதில் பங்கேற்காமல் அவையை விட்டு வெளியேறினார். இதுவே இரட்டை நிலைப்பாடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க : சுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்