By: WebDesk
Updated: October 21, 2019, 07:55:02 PM
exit poll tamil nadu 2019, tamil nadu by election exit poll 2019, நாங்குனேரி, விக்கிரவாண்டி தேர்தல், எக்ஸிட் போல்
Nanguneri, Vikravandi Exit poll Results 2019: நாங்குனேரி, விக்கிரவாண்டி வாக்குப் பதிவு முடிந்த நிலையில் எக்ஸிட் போல் தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன. இந்தத் தொகுதிகளில் எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு? என்பது விவாதமாக மாறியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளில் இன்று (அக்டோபர் 21) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.
விக்கிரவாண்டியில் மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு சதவிகிதம் 75-ஐத் தாண்டியது. அதேசமயம் நாங்குனேரியில் வாக்குப் பதிவு சதவிகிதம் 70 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது. நாங்குனேரியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் பெருமளவில் தேர்தலை புறக்கணித்ததாலேயே அங்கு வாக்குப் பதிவு சதவிகிதம் குறைந்ததாகவே தெரிகிறது.
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பிரநிதித்துவப் படுத்தும் முக்கிய அரசியல் கட்சியான புதிய தமிழகம் இந்த முறை அதிமுக.வுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது. அதனால் அதிமுக.வுக்கு கிடைக்கவேண்டிய வாக்குகள் பறிபோனதாக கருதப்படுகிறது. அதேசமயம், டிடிவி தினகரன் கட்சி தேர்தலில் நிற்காத காரணத்தால், இன்னொரு பகுதி வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என அதிமுக முன்னணியினர் கருதுகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் அமைச்சர்கள் சிலர் சசிகலாவை புகழ்ந்து பேசிய பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.
நாங்குனேரியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்தகுமார் ஆகியோர் கடைசி நிமிடம் வரை அங்கு பிரசாரத்தில் மல்லுக்கட்டினர். அதேசமயம் திமுக தரப்பில் இங்கு அவ்வளவு தீவிரம் காட்டவில்லை என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. காங்கிரஸுக்கு ஆதரவான வாக்குகளை பிரிக்கும் நோக்கிலேயே இன்னொரு குறிப்பிட்ட சமூக பிரமுகரை சுயேட்சையாக ஆளும்கட்சி களம் இறக்கியதாக கூறுகிறார்கள். இது காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு மைனஸ்.
விக்கிரவாண்டியைப் பொறுத்தவரை, திமுக – அதிமுக இடையே கடும் போட்டி இருந்தது. இங்கு பாமக, தேமுதிக வாக்கு வங்கிகள் அதிமுக.வுக்கு கை கொடுத்தன. திமுக தரப்பில் பொன்முடியும், அதிமுக தரப்பில் சி.வி.சண்முகமும் இங்கு பொறுப்பெடுத்து வேலை செய்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாமக வேட்பாளர் சுமார் பத்தாயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றது. அதை ஈடுகட்டுவது நடக்குமா? என்பதுதான் ஆளும்கட்சிக்கான சவால்.