அதிமுக.வில் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் என உயர் பதவிகளை வகித்த நாஞ்சில் முருகேசன், 15 வயது சிறுமி கொடுத்த பாலியல் புகாரில் கைதாகியிருப்பது அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. பெரிய மனுஷன், உயர் பதவியில் இருப்பவர் என்றெல்லாம் நம்பி, குழந்தைகளை பழக அனுமதிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.
நாஞ்சில் முருகேசன்… அதிமுக வட்டாரத்தில் மிகப் பிரபலமானவர்! சில ஆண்டுகள் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக.வின் அத்தனை செலவுகளையும் எதிர்கொண்டு சமாளித்தவர். இதனால் தலைமைக் கழகம் வரை செல்வாக்கு பெற்றவர். அமைச்சர் பதவி வரை வந்திருக்க வேண்டியவர், சில பல அரசியல் சதுரங்க ஆட்டத்தில் சிக்கி அந்த வாய்ப்பை இழந்தார். இன்று சிறுமி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் அவரது அரசியல் சாம்ராஜ்யமே சரிந்திருக்கிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதுடன், அந்த வழக்கில் கைதும் செய்யப்பட்டிருக்கிறார்.
யார் இந்த நாஞ்சில் முருகேசன்?
சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த புத்தளம் அருகேயுள்ள ஒரு குக்கிராமம் கல்லடிவிளை. இங்கு சின்னதாக ஒரு பெட்டிக்கடை வைத்து, வெற்றிலை பாக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்தான் முருகேசன். அந்தக் கடை மூலமாக கிடைத்த பழக்க வழக்கத்தைக் கொண்டு, நில புரோக்கராக உருவம் பெற்றார்.
2005-க்கு பிறகு ரியல் எஸ்டேட் தொழில் உச்சம் பெற்ற தருணம்! அந்தத் தொழிலில் முருகேசனுக்கு பணம் கொட்டத் தொடங்கியது. பிறகு சிறிய அளவில் நிலங்களை அவராகவே வாங்கி விற்கத் தொடங்கினார். ஓரிரு ஆண்டுகளில் நிலங்களை பிளாட் போட்டு விற்கும் அளவுக்கு வளர்ந்தார்.
‘வெறும்’ முருகேசன், ‘நாஞ்சில் முருகேசன்’ ஆகிவிட்டார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் அவர் எதிர்கொண்ட சில சிரமங்கள், அரசியலின் அவசியத்தை அவருக்கு உணர்த்தின. 2006 காலகட்டத்தில் பாரதிய ஜனதாவில் சேர்ந்து, நாகர்கோவில் நகரப் பொருளாளராக பதவி பெற்றார். அப்போதே, ‘வெறும்’ முருகேசன், ‘நாஞ்சில் முருகேசன்’ ஆகிவிட்டார்.
பாஜக.வில் கிடைத்த பதவி, அவரது ரியல் எஸ்டேட் பிசினஸுக்கு உதவியிருக்கலாம். ஆனால் இதற்குள் முருகேசன் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகளை கனவு காண ஆரம்பித்தார். ஆனால் பாஜக.வில் அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
2009 காலகட்டத்தில் மாநில எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசியல் செய்ய சற்றே திணறியது. கட்சிக்கு செலவு செய்ய சரியான நபரை மாவட்ட நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போதுதான் முருகேசன், பா.ஜ.க.வில் இருந்து அதிமுக.வுக்கு தாவி வந்தார். இங்கு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் பலவற்றுக்கும் ரியல் எஸ்டேட் பணத்தை தண்ணீராக வாரி இறைத்தார். இதனால் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் மனம் குளிர்ந்தது.
வாரியிறைத்த பணம், சில கோடிகளைத் தாண்டும்
அதிமுக.வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக இருந்தது, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர் பதவிதான். இந்தப் பதவியில் இருக்கிறவர்களுக்கு எம்.எல்.ஏ அல்லது எம்.பி சீட் உறுதி என்பது எழுதப்படாத சட்டமாக இருந்த காலம் அது.
நாஞ்சில் முருகேசன் கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்தில், குமரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனார். இந்தக் காலகட்டங்களில் கட்சிக்கு இவர் வாரியிறைத்த பணம், சில கோடிகளைத் தாண்டும். ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் அந்த அணியின் மாநில நிர்வாகிகள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளிடமும் நெருங்கினார் முருகேசன். இவரது, ‘தாராள’ குணம் அந்தக் காலகட்டத்தில் தலைமைக்கழகம் வரை குளிரச் செய்தது.
2011 தேர்தலில் எதிர்பார்த்தபடியே நாகர்கோவில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் முருகேசன். இவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணனும், திமுக சார்பில் வழக்கறிஞர் மகேஷும் போட்டியிட்டனர். இதற்கிடையே தேர்தலை குறிவைத்து, நாகர்கோவில் தொகுதி முழுவதும் கோவில்களின் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பணிகளுக்காக பணத்தை வாரியிறைத்திருந்தார் முருகேசன்.
அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
மாநிலம் முழுவதும் அதிமுக.வுக்கு சாதகமாக இருந்த சூழல், இவரது வள்ளல் இமேஜ் ஆகிய இரண்டும் சேர்ந்து நாகர்கோவில் தொகுதியில் இவரை வெற்றிபெற வைத்தன. அதுவும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை எதிர்த்து! எனவே அப்போது தலைமையின் கவனமும் இவர் மீது அழுத்தமாகப் படிந்தது. எனினும் பள்ளிப் படிப்பைத் தாண்டாததால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
எனினும் சளைக்காத நாஞ்சில் முருகேசன், ஒருகட்டத்தில் கட்சிக்குள் பல ஜாம்பவான்களை வீழ்த்தி மாவட்டச் செயலாளர் ஆனார். அமைச்சர் பதவி ஆசையையும் விடாமல், முட்டி மோதிக்கொண்டே இருந்தார். கடைசி வரை அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.
இவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலகட்டத்தில் நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியில் முப்போகம் விளையும் வயல்வெளிகளை மலிவு விலைக்கு வாங்கி பிளாட் போட்டு விற்றார் என்கிற புகார் உண்டு. இவரது ஜாகையையும் அந்த ஏரியாவுக்கு மாற்றிக் கொண்டார். எம்.எல்.ஏ ஆனபிறகு சற்றே ‘வள்ளல் தன்மை’யை குறைத்துக் கொண்டு தொழிலில் கவனம் கூட்டினார். அரசல் புரசலாக அப்போதே இவர் மீது செக்ஸ் புகார்களும் அடிபட்டன.
சுரேஷ்ராஜனிடம் தோற்றார்
2016 தேர்தலில் மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் சீட் கேட்டு அதிமுக சார்பில் நின்ற நாஞ்சில் முருகேசன், திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனிடம் தோற்றார். இதற்கிடையே கட்சிக்குள் இவரை வளர்த்து விட்டவர்களே இவருக்கு எதிராக திரும்பியிருந்தார்கள். இந்தச் சமயத்தில் 15 வயது சிறுமி கொடுத்த செக்ஸ் புகாரில் ஜூலை 29-ம் தேதி கைதாகியிருக்கிறார் நாஞ்சில் முருகேசன்.
மேற்படி சிறுமியின் தாயாருக்கும், முருகேசனுக்கும் அரசியல் ரீதியாக நெருக்கம் என்கிறார்கள். அந்த அடிப்படையில் மேற்படி சிறுமியை இவர் அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறுகிறார்கள். தவிர, மேற்படி சிறுமியும் இளைஞர் ஒருவரும் பழகியதை இவர் தடுக்கப் போனதால்தான், அந்தச் சிறுமி இவர் மீது இந்தப் புகாரை சுமத்திவிட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
கைதான நாஞ்சில் முருகேசனுக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் என குடும்பம் இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பாதித்த நிலங்களும் ஏக்கர் கணக்கில் இருக்கிறது. எல்லாம் இருந்தும் தவறான தொடர்பால் அவரது சாம்ராஜ்யம் சரிந்து போயிருக்கிறது.