'என்னைப் புழுவாய் பார்த்தார்கள்'! - விலகிய காரணத்தை உருக்கமுடன் நாஞ்சில் சம்பத்

ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்

டிடிவி.தினகரன் கடந்த 15ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். இது தற்காலிகமானதுதான். அதிமுகவை கைப்பற்றுவதே எங்கள் முதன்மை நோக்கம் என்று மேடையில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் பெயரின் திராவிடம் இல்லை என்று கூறி, கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார்.

கட்சியில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதால் விலகுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட பொழுது, “நான் பொது வாழ்வில் 30 வருடங்களாக டாக்டர் கலைஞர் தலைமை ஏற்று, அண்ணன் வைகோ தலைமை ஏற்று, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று பயணம் செய்துள்ளேன். என்னை என்றைக்கும் முன்னிலை படுத்திக் கொண்டது இல்லை. கட்சியில் தரும் எந்த பொறுப்புக்காகவும் நான் பணியாற்றியதில்லை. என்னுடைய உலகம் மேடை. நான் கொண்டுள்ள கொள்கையை வானம் அதிர பேச வேண்டும் என்பதைத் தவிர வேறு கொள்கையில்லை” என்று பதில் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டரில் உருக்கமாக சில ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அதில், “இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன், அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன். அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் தான் தினகரனை விட்டு பிரிந்தேன் என்பதை நாஞ்சில் சம்பத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close