scorecardresearch

நாஞ்சில் சம்பத், மீண்டும் மதிமுக.வில் இணைகிறார்: பேச்சுவார்த்தை மும்முரம்

நாஞ்சில் சம்பத் ஏற்கனவே வகித்த கொள்கை விளக்க அணிச் செயலாளர் பொறுப்பை மீண்டும் அவரிடம் வழங்க வசதியாகவே அழகுசுந்தரத்திற்கு பதவி உயர்வு…

நாஞ்சில் சம்பத், மீண்டும் மதிமுக.வில் இணைகிறார்: பேச்சுவார்த்தை மும்முரம்
Nanjil Sampath TO Rejoin with MDMK, Vaiko

நாஞ்சில் சம்பத் மீண்டும் மதிமுக.வில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடக்கின்றன. எனவே எந்த நேரமும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம்!

நாஞ்சில் சம்பத், திமுக.வில் பேச்சாளராக இருந்தவர்! 1993-ல் வைகோ அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி மதிமுக தொடங்கியபோது, நாஞ்சில் சம்பத்தும் அதில் இணைந்தார். மதிமுக.வின் கொள்கை விளக்க அணிச் செயலாளராக தமிழ்நாடு முழுவதும் சம்பத் பேசாத ஊரே இல்லை. குறிப்பாக வைகோ பொடாவில் சிறையில் இருந்த காலகட்டங்களில் மதிமுக.வை தக்க வைத்ததில் சம்பத்திற்கு பெரும் பங்கு உண்டு.

நாஞ்சில் சம்பத், வெளிப்படையாக யாரையும் கமெண்ட் செய்யும் தன்மை கொண்டவர்! இதுவே 2012 கடைசியில் வைகோவுக்கும் அவருக்கும் மனஸ்தாபங்களை உருவாக்கியது. சம்பத் ம.தி.மு.க.வில் இருந்து வெளியேறப்போவதாக செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து சம்பத்துடன் பேசுவதை தவிர்த்தார் வைகோ. ஓரிரு மாதங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார் சம்பத்!

நாஞ்சில் சம்பத்தின் நாகர்கோவில் இல்லத்திற்கே திமுக பிரமுகர்கள் தேடிச் சென்று திமுக.வில் அவரை இணைக்க பேசினார்கள். குறிப்பாக அதற்கு சில மாதங்களுக்கு முன்பு மதிமுக.வில் இருந்து திமுக.வுக்கு சென்ற பிரமுகர்கள் அதில் அதீத ஆர்வம் காட்டினார்கள். ஆனால் சம்பத் அவர்களுக்கு பிடிகொடுக்காமல் 2012 டிசம்பரில் அதிமுக.வில் ஐக்கியமானார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலில் சசிகலாவை மறைமுகமாக விமர்சித்தவர், பிறகு அதே அணியில் இணைந்தார். டிடிவி தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது, வைகோ பொடாவில் இருந்தபோது மதிமுக.வுக்கு ஆற்றிய பணியை இங்கும் செய்தார். ஆனாலும் டிடிவி வெளியே வந்தபிறகு போதிய மரியாதை இல்லாமல் புழுங்கிய சம்பத், ‘கட்சி பெயரில் அண்ணா இல்லை’ என்கிற காரணத்தை குறிப்பிட்டு வெளியேறினார்.

‘இனி அரசியலில் ஈடுபடமாட்டேன். எந்தக் கொடியையும் தூக்க மாட்டேன். யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன். பேச்சாளர் பயிற்சி பட்டறை அமைத்து மேடைப் பேச்சாளர்களை உருவாக்கப் போகிறேன்’ என கடந்த மே 17-ம் தேதி சபதம் போட்டுவிட்டு டிடிவி தினகரன் கட்சியில் இருந்து வெளியேறினார் சம்பத்!

ஆனால் ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது அரசியலுக்கும் பொருந்தும் போல! இதோ.. சம்பத் மறுபடியும் அரசியல் களம் காண தயாராகிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. ஈழ ஆதரவாளரான ஓவியர் வீர சந்தானம் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடந்தபோது அங்கு வைகோவை சந்தித்து பேசியிருக்கிறார் சம்பத்! அப்போது இருவரும் பாசத்துடன் பேசிக்கொண்டார்கள் என்கிறது மதிமுக வட்டாரம்!

தொடர்ந்து மதிமுக.வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும், ‘சம்பத்தை இணைச்சா கட்சிக்கு நல்லது’ என வைகோவிடம் சொல்ல, அவரும் அதுகுறித்து யோசிக்க ஆரம்பித்தார். சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றிலும் வைகோவும் சம்பத்தும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். இதன்பிறகே சம்பத் மதிமுக.வில் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆனதாக சொல்கிறார்கள்.  அண்மையில் வைகோ குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் செய்து பேசியதற்கு நாஞ்சில் சம்பத் கொடுத்த காரசார பதிலடியையும் சிலர் நினைவூட்டுகிறார்கள்.

மதிமுக.வின் கொள்கை விளக்க அணி செயலாளராக தற்போது பொறுப்பு வகிக்கும் அழகுசுந்தரம், அண்மையில் உயர் நிலைக்குழு உறுப்பினராக பதவி உயர்த்தப்பட்டிருக்கிறார். நாஞ்சில் சம்பத் ஏற்கனவே வகித்த கொள்கை விளக்க அணிச் செயலாளர் பொறுப்பை மீண்டும் அவரிடம் வழங்க வசதியாகவே அழகுசுந்தரத்திற்கு பதவி உயர்வு வழங்கியதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர்.

சம்பத், அடுத்த தாவலுக்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nanjil sampath to rejoin with mdmk vaiko