நிர்வாகத்தில் புலி அல்ல என்றும் அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளுக்கு கையெழுத்து போடுபவர்தான் ரங்கசாமி என்று நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்
புதுவை முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: “முதல் அமைச்சர் ரங்கசாமி நேரடியாக என்னை விமர்சனம் செய்துள்ளார். அவர் முதல் அமைச்ராக, எதிர்க்கட்சித்தலைவராக இருந்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் வளர்ச்சி திட்டங்கள் விரைவாக நடந்தன. கவர்னகள் ஆளும் அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர்.
மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியை வாரிவழங்கியது. எவ்வித சிரமும் இல்லாமல் ஆட்சி நடந்தது. கடந்த 2016ல் காங்கிரஸ் அரசு பதவியேற்கும் முன்பு கவர்னர் கிரண்பேடி பொறுப்பேற்று விதிமுறைகளை மீறி செயல்பட ஆரம்பித்தார். அதனால் நீதிமன்றத்தை நாடினோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதைய அமைச்சர் லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வழக்கறிஞரான முதல்வர் ரங்கசாமி படித்து பார்க்கவேண்டும். துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரமில்லை என்பது புரியும். கிரண்பேடி மேலும் இம்மனு நிலுவையில் உள்ளது.
நிர்வாகம் திரைமறைவில் நடத்த வேண்டுமா.?- முதல் அமைச்சருக்கு நிர்வாகமே தெரியாது. நிர்வாகசீர்கேடு பற்றி அவர் எங்களை குற்றம்சாட்டுகிறார். விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் காங்கிரஸ் அரசு செயல்பட்டது. தற்போது நிர்வாக முறைகேடுகள் நடக்கிறது. ரங்கசாமி நிர்வாகத்தில் புலி அல்ல. அதிகாரிகள் தயாரிக்கும் கோப்புகளுக்கு கையெழுத்து போடுபவர்தான்.
தனது அதிகாரத்தை செலுத்தாமல் என்னை குறைகூறுவதை ரங்கசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். கிரண்பேடி தொல்லையையும் மீறி திட்டங்களை நிறைவேற்றினோம். தற்போது அண்ணன்- தங்கை என்று கூறிய நிலையில் திட்டங்கள் தடைப்படுவது ஏன்.?மாநிலஅந்தஸ்து, மத்திய நிதி கமிஷனில் புதுவையை சேர்ப்பது உள்ளிட்ட ரங்கசாமியின் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகியும் செயல்படுத்தவில்லை. ஒன்றுகூட நடக்காததை சுட்டிக்காட்டி கேட்கிறோம்.
ரங்கசாமி கோபப்படுவதில் அர்த்தமில்லை. நிதி அதிகாரம் இல்லாவிட்டால் நிதித்துறை, தலைமைச்செயலர் ஆகியோர் கையெழுத்திட மாட்டார்கள். ஏற்கெனவே தலைமைச்செயலர் அஸ்வினிகுமாரை மாற்றினார்கள். தற்போதைய தலைமைச்செயலர் ராஜீவ்வர்மாவை மாற்ற கோரிக்கை வைக்கிறார். மத்திய உள்துறையில் பேசி ஒரு மணிநேரத்தில் தலைமைச்செயலரை மாற்றுவதை விட்டு அதிகாரிகள் திட்டங்களை முடக்குவதாக ரங்கசாமி புலம்புகிறார்.
கையாளாகாத ஆட்சி நடத்திவிட்டு எங்களை ரங்கசாமி குறை கூறுகிறார். பாஜகவுக்கும் என்ஆர்.காங்கிரஸுக்கும் சுமூக உறவு உள்ளதா- மத்திய அரசு ஒத்துழைப்பு தருகிறதா என்பதற்கு முதல் அமைச்சர் பதிலளிக்கவேண்டும். யாருக்கு நிர்வாகம் தெரியாது என்பது புதுவை மக்களுக்கு தெரியும். நிர்வாகத்தில் விதிமுறைப்படி செயல்படவேண்டும்.
ரங்கசாமி எங்களை குறைகூறுவதை விட்டு நிர்வாகத்தை சரியாக நடத்தி, பிரதமரை அணுகி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மாதம் பெண்களுக்கு ரூ. ஆயிரம் கோப்பு, ரூ. 18 ஆயிரம் ஊதியம் உயர்வு, இலவச பஸ் பயணத்திட்டம் நடைமுறைப்படுத்தாமல் எதிர்க்கட்சியினரை குறை கூறுகிறார். எதிர்க்கட்சியினரை சாடுவது முதல்வருக்கு அழகல்ல.
தற்போது தமிழக எம்பிக்கள் தொடர்பான பேட்டி விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை அந்தர்பல்டி அடித்துள்ளார். எம்பியை வரக்கூடாது என்று தற்போது கூறி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். ஏன் தமிழிசை தமிழக அரசியலில் மூக்கை நுழைக்கிறார். பதவியை ராஜிநாமா செய்து விட்டு பேசலாம். அதற்கு பதில் சொல்லவில்லை. தமிழக அரசை விமர்சனம் செய்வதுதான் தமிழிசை வேலை.
புதுவையில் முதல் அமைச்சருக்கு பதிலாக கவர்னர் தமிழிசைதான்பேசி சூப்பர் முதல்வராக உள்ளார். அரசு திட்டத்தை முதல்வர்தான் அறிவிக்கவேண்டும். முதல்வர் ரங்கசாமி ஏமாளி, முதல்வரின் அதிகாரத்தை கையில் எடுத்து அவரை செயல்படவிடாமல் இருக்கிறார். முதல் அமைச்சர் தரும் கோப்புகளுக்கு கையெழுத்து இடுவதாகக்கூறிவிட்டு ஊதிய உயர்வு கோப்பு உட்பட பல கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார். தமிழிசை செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது. புதுவை வளர்ச்சிக்கு ஏதுமில்லை” இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”