வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் சின்ன கோவிந்தம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஒதுக்குப்புறமான இடத்தில் 4 பேர் காரில் இருந்து பார்சல்கள் மாற்றப்பட்டன.
இதைப் பார்த்த அருகில் சென்று பார்சல்களில் என்ன உள்ளது எனக் கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதைக் கேட்ட போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் காரில் இருந்தவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த நாசர் (வயது 42), சர்புதீன் (37), மதுரை அங்காடிமங்கலத்தை சேர்ந்த வாசிம் அக்ரம் (19), சென்னை பிராட்வே சாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகைதீன்கலி என்பவரது மகன் நிசார் அகமது (33) என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் அவர்கள் பார்சலில் மாற்றியது ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் ரூ.50 ஆயிரம் கூலிக்கு ஆசைப்பட்டு இதைச் செய்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் வருமான வரித்துறை அலுவலர்களும் விசாரணை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.14.5 கோடி எனத் தெரியவந்துளளது. இதற்கிடையில் இந்தப் பணம் பிராட்வேயில் இருந்து யாருக்காக எதற்காக கடத்தப்பட்டது என பாஜக மூத்தத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “சென்னை பிராட்வேயிலிருந்து கேரளாவிற்கு சென்ற வாகனத்தில் ரூபாய் பத்து கோடியை கடத்தி சென்றது யார்? எதற்காக?” என வினவியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil