புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஏப்.29) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நலிவடைந்த நிறுவனங்களை புனரமைக்க பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ.ஆயிரத்து 500 கோடி நிதி என்ன ஆனது? ஊழியர்களின் தற்கொலை முயற்சிக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
ரூ.2 ஆயிரம் கோடி கூடுதலாக தேவை என மத்திய அரசிடம் கேட்டனர். ஆனால் ரூ.500 கோடி கூட கிடைக்கவில்லை. நிதி பற்றாக்குறையில் சிக்கி அரசு தவிக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை அளிப்போம் என்றனர்.
ஆனால் காவல்துறை தவிர வேறு பணிக்கு ஆட்கள் தேர்வு நடக்கவில்லை. காலியாக உள்ள 9 ஆயிரம் அரசு பணியிடங்களில் 3 ஆயிரம் பணியிடத்துக்கு மட்டுமே நிரப்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் படித்த புதுவை இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தால் புதுவையிலும் பலர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம்கூட வில்லியனுõரை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளார்.
புதுவை அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாஜகவை சேர்ந்தவர்தான் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்துகிறார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மே 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை புதுவை மாநிலகாங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
கர்நாடகாவில், காங்கிரசின் வெற்றி பிரகாசமாக உள்ளது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார். ஆனால் அதானியை பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.
கர்நாடக தேர்தலுக்காக நடந்த பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் தடுத்து நிறுத்தியுள்ளார். தமிழன் என தன்னை பறைசாற்றிக்கொள்ளும் அண்ணாமலை இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்துள்ளார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“