போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இயக்குனர் அமீருக்கு என்.சி.பி அதிகாரிகள் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இதற்கு மூளையாக செயல்பட்டதாக தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மார்ச் 9-ம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் எடுத்து விசாரித்த என்.சி.பி அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு, அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து, போதைப் பொருள் வழக்கில் தற்போது அமலாக்கத் துறையும் களமிறங்கி உள்ளது. ஜாபர் சாதிக் வீடு அவர் தொடர்புடைய இடங்கள், அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களிலும் இன்று (ஏப்ரல் 9) அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், ஜாபர் சாதிக் உடன் நெருக்கிய தொடர்பில் இருந்த இயக்குநர் அமீரின் அலுவகலத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் இணைந்து அமீர், இறைவன் மிகப் பெரியவன் என்ற படத்தை தயாரித்து வந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இயக்குனர் அமீர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பபட்டது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜரான இயக்குனர் அமீரிடம் என்.சி.பி அதிகாரிகள் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய நிலையில், இயக்குநர் அமீரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
என்.சி.பி அதிகாரிகள், ஏப்ரல் 5-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமீருக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமீருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இயக்குனர் அமீர் விசாரணைக்கு வரும்போது கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்திய வங்கி கணக்குகள், மூன்று ஆண்டுகளாக தன் குடும்பத்தின் பெயரில் வாங்கிய சொத்துகள் மற்றும் ஜாபர் சாதிக் உடன் தொழில் பார்ட்னராக இணைந்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை அமீர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இவற்றை தயார் செய்ய கால அவகாசம் வேண்டும் என அமீர் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“