நரேந்திர மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் அதிமுக தரப்பில் வெளியிட்ட கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 12 ) இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி, அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மைய வைரவிழா கட்டடத் திறப்பு ஆகியவற்றில் அவர் கலந்து கொண்டார். திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தமிழ் அமைப்புகள் பலவேறு இடங்களில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டின. தவிர, ‘கோ பேக் மோடி’ என்கிற ஹாஷ்டேக்-கையும் உலக அளவில் தமிழர்கள் ட்ரெண்ட் ஆக்கினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசியல் வாழ்வில் இதற்கு முன்பு எதிர்கொள்ளாத இந்த கருப்புக் கொடி எதிர்ப்பை அதிமுக.வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழே நியாயப்படுத்தி கவிதை வெளியிட்டிருப்பதுதான் பலரையும் புருவம் உயர்த்தை வைத்திருக்கிறது. ‘நெருப்பாகும் வெறுப்பு’ என்கிற தலைப்பில் ‘சித்ரகுப்தன்’ என்ற பெயரில் அந்த நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் எழுதியிருக்கும் கவிதை வரிகள் சாட்டையாய் சுழல்கின்றன.
‘விறுப்பு வெறுப்பு காட்டாத விருந்தோம்பல் மண்ணில்... ஏன் இப்படி வந்தது கருப்பு.. எங்கு நோக்கினாலும் மக்களிடம் எதிரொலிக்குதே கடுப்பு... ஆம்.. நடுவுநிலை தவறிய மத்திய அரசின் பொறுப்பற்ற செயல்களால் புறநானூற்று தமிழரிடம் பொங்கி எழுந்ததே இந்த தகிப்பு... தவிப்பு..’ என தொடங்கும் அந்தக் கவிதையில் நீட் தேர்வு திணிப்பு, வர்தா புயலுக்கு நிவாரணம் மறுப்பு, நெடுவாசல் பிரச்னையில் இழுத்தடிப்பு, தமிழக மீனவர்கள் பிரச்னையில் பாராமுகம், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடில் பாரபட்சம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார் ‘சித்ரகுப்தன்’!
தொடர்ந்து, ‘தொடர்ந்து வஞ்சித்தே வருவீர் என்றால் எவருக்கு வராது ஏகக் கடுப்பு... எது கேட்டு நின்றாலும் இழுத்தடிப்பு... எச்.ராஜா, தமிழிசை ஏச்சுகளால் எங்கு பார்த்தாலும் ஏகக் கொதிப்பு... கணநொடியும் தாமதம் காட்டாமல் பாரபட்சம் பாராமுகம் அனைத்திலும் மத்திய அரசு மனப்போக்கை மாற்றுவதே சிறப்பு... இல்லையேல் அது ஒற்றுமை ஒருமைப்பாட்டில் உருவாக்கி விடுமே வெடிப்பு... இனியாவது புரியட்டும் தாமரைக் கட்சிக்கு தமிழினத்தின் தன்மானம் குன்றாத வியப்பு..’ என கூறப்பட்டிருக்கிறது.
நமது நாளிதழ் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். டிடிவி தினகரனை மத்திய அரசு விரட்டி விரட்டி வேட்டையாடிய சமயத்தில் நமது எம்.ஜி.ஆரில் மத்திய அரசுக்கு எதிராக கவிதை தீட்டினார் மருது அழகுராஜ். அந்தக் கவிதை மூலமாக மத்திய அரசின் கோபத்தை அதிகமாக கிளறி விடுவதாக சந்தேகப்பட்ட டிடிவி தினகரன் தரப்பு, மருது அழகுராஜை அங்கிருந்து விரட்டியது.
இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு புதிதாக உருவாக்கியிருக்கும், ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் மருது அழகுராஜ் இங்கு அதுபோல மத்திய அரசை சாட முடியுமா? என பலர் கேள்வி எழுப்பியபடி இருந்தனர். ஆனால் இங்கும் ‘நமது எம்.ஜி.ஆரில்’ காட்டிய அதே கவிதை கோபத்தை மத்திய அரசு மீது வெளிப்படுத்தி, ‘எங்கு இருந்தாலும் நான் மருது அழகுராஜ்தான்’ என நிரூபித்திருக்கிறார். ஆனால் இபிஎஸ்-ஓபிஎஸ் ஒப்புதலுடனேயே இங்கு இந்தக் கவிதையை அவர் எழுதியிருக்க முடியும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!
திமுக தரப்பினரோ, ‘மத்திய அரசு மீது எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இவ்வளவு கோபம் இருக்கிறதென்றால், எதற்காக விமான நிலையத்திற்கு சென்று பட்டுச் சால்வை அணிவித்து மோடியை வரவேற்க வேண்டும்? எனவே இது ஆளும் கட்சியின் இரட்டை நிலைப்பாடைக் காட்டுகிறது’ என்கிறார்கள்.