நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியின் இல்லங்கள் மற்றும் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் கருப்புக் கொடி பறந்தது.
பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இன்று இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்கும் அவர், அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மைய வைரவிழா கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட பலவேறு அமைப்புகள் அறிவித்தன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில் இருப்பதால் கருப்புக் கொடி போராட்டத்தில் நேரடியாக பங்கேற்க வாய்ப்பில்லை.
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியின் கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி இல்லங்கள், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அனைவரும் தங்கள் இல்லங்களில் இன்று கருப்புக் கொடி ஏற்றவேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் திமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் பலரும் இன்று தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர். நாகையில் இன்று காலையில் தனது பயணத்திற்கு இடையே மு.க.ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.