பிரதமர் மோடிக்கு வைகோ சவால் : ‘நெஞ்சுரம் இருந்தால் சென்னையில் சாலை மார்க்கமாக பயணியுங்கள்!’

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சென்னையில் சாலை மார்க்கமாக பயணிப்பதை தவிர்க்கிறார். இது தொடர்பாக அவருக்கு வைகோ சவால் விடுத்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சென்னையில் சாலை மார்க்கமாக பயணிப்பதை தவிர்க்கிறார். இது தொடர்பாக அவருக்கு வைகோ சவால் விடுத்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஏப்ரல் 12) சென்னை வருகிறார். சென்னையில் அவர் 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்து சேரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை செல்கிறார். அங்கு நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிஹாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் சென்று, அங்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மையத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்கிருந்து காரில் சென்னை விமான நிலையம் திரும்புவதாக அதிகாரபூர்வ பயணத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் அந்த பயண முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொண்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரிலேயே அடையாறில் உள்ள ஐஐடி மைதானத்தில் வந்து இறங்குகிறார். ஐஐடி வளாகமும், புற்று நோய் ஆராய்ச்சி மையமும் அடுத்தடுத்து உள்ளன. ஐஐடி வளாகத்தில் இருந்து ஒரு சுவரை மட்டும் உடைத்து புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு பாதை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரிலேயே சென்னை விமான நிலையத்திற்கு திரும்புகிறார். இதன் மூலமாக சென்னையில் சாலை மார்க்கமாக பயணிப்பதை பிரதமர் மோடி தவிர்ப்பதாக தெரிய வந்திருக்கிறது.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஏற்கனவே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. காவிரி போராட்டங்கள் வலுத்திருக்கும் சூழலில், மேலும் பல தமிழ் அமைப்புகள் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் அறிவித்துள்ளன. குறிப்பாக வேல்முருகன், சீமான், பெ.மணியரசன் ஆகியோரை உள்ளடக்கிய காவிரி உரிமை மீட்புக் குழு, இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரை உள்ளடக்கிய புதிய அமைப்பு ஆகியனவும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தவிருக்கின்றன.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் இந்த அமைப்புகள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் போலீஸ் தடியடி, போலீஸ் மீது தாக்குதல், ரசிகர்கள் மீது தாக்குதல் என பல நிகழ்வுகள் அரங்கேறின. இந்தச் சூழலில் சர்ச்சைகளையும் பதற்றத்தையும் தவிர்க்கும் விதமாக மோடி தனது பயண முறையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடிக்கு நெஞ்சுரம் இருந்தால், சென்னையில் சாலை மார்க்கமாக பயணிக்க வேண்டும். கருப்புக் கொடியை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? கருப்புக் கொடியில் தோட்டாக்களை வைத்து சுட்டுவிடவா போகிறோம்? நீங்கள்தான் 56 இன்ஞ் உடல் கொண்டவர் ஆயிற்றே? நீங்கள் முசோலினியாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் முசோலினியிடம் இருந்த துணிச்சல் உங்களிடம் இல்லை’ என்றார் வைகோ.

மோடியின் வருகையும், போராட்ட அறிவிப்புகளும் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

×Close
×Close