பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம் : சென்னை வருகையும் உறுதி

நரேந்திர மோடி உண்ணவிரதம் அறிவித்திருப்பதால் அவரது சென்னை வருகை ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுகிறது. திட்டமிட்டபடி வருவார் என்கிறது பாஜக!

நரேந்திர மோடி உண்ணவிரதம் அறிவித்திருப்பதால் அவரது சென்னை வருகை ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுகிறது. திட்டமிட்டபடி வருவார் என்கிறது பாஜக!

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஏப்ரல் 12) தமிழ்நாடு வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்து சேரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை செல்கிறார். அங்கு நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிஹாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் சென்று, அங்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு டெல்லி திரும்புகிறார். பிரதமரின் இந்த நிகழ்ச்சி நிரல் சில தினங்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் வீணடித்ததைக் கண்டித்து நாடு முழுவதும் பாஜக எம்.பி.க்கள் வியாழக்கிழமை (ஏப்ரல் 12) உண்ணாவிரதம் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் தனது வழக்கமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தையும் தொடர்கிறார்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடியும் வழக்கமான தனது அலுவல்களை தொடர்ந்தபடியே உண்ணாவிரதம் இருப்பார் என கூறப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டதால் மோடியின் சென்னை விசிட் ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுந்தது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நாளை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரதமரின் பயணத்தின் இன்று (புதன்கிழமை) நண்பகல் வரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான அலுவல்களுடன் பிரதமர் உண்ணாவிரதம் மேற்கொள்வார் என கூறப்பட்டிருப்பதால், அவரது சென்னை பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்’ என்கிறார்கள் அவர்கள்.
இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை மோடி சென்னை வருவதில் எந்த மாற்றமும் இல்லை என உறுதி செய்தார். இதன் மூலமாக ஒரே இடத்தில் அமர்ந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளாமல், தனது பயணம், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டபடியே அவர் உண்ணாவிரதம் கடைபிடிக்க இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

 

×Close
×Close