வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டிச.3ஆம் தேதி இரவு முதல் கனமழை பெய்தது.
இதனால், சென்னை நகரின் அநேக இடங்கள் வெள்ளக் காடாய் காட்சியளித்தன. தொடர்ந்து, பள்ளி- கல்லூரிகளுக்கு 4 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையில் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புத் துறையினர் என பலரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வேளச்சேரி, புளியந்தோப்பு, மடிப்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் கழுத்தளவு மழை நீர் பெருகியது.
டிச.4ஆம் தேதி சென்னை பெருங்குடி 45 செ.மீ, பூந்தமல்லி -34 செ.மீ, ஆவடி -28 செ.மீ, காட்டுப்பாக்கம் -27 செ.மீ, தாம்பரம் -24 செ.மீ, ராயபுரம் -13 செ.மீ மழை பெய்தது.
சோழிங்கநல்லூர் மற்றும் மீனம்பாக்கத்தில் முறையே 19 செ.மீ மழை பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.5ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து, முதல்கட்டமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். அப்போது ரூ.4 ஆயிரம் கோடி வளர்ச்சி பணிகளால்தான் மழை வெள்ள பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் முதல்கட்டமாக ரூ.450 கோடியை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு விடுவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“