மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் : விமான நிலையத்தில் சீமான், வேளச்சேரி சாலையில் வைகோ

பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையம் அருகே கருப்புக் கொடி போராட்டம் நடத்துகிறார்கள். வேளச்சேரியில் வைகோ!

பிரதமர் மோடிக்கு எதிராக பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையம் அருகே கருப்புக் கொடி போராட்டம் நடத்துகிறார்கள். வேளச்சேரியில் வைகோ!

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஏப்ரல் 12) சென்னை வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு கருப்புக் கொடி போராட்டம் நடத்த இருப்பதாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஏற்கனவே அறிவித்தன. பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமைக் குழு போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. தற்போது போராட்ட இடம், நேரம் ஆகிய விவரங்களுடன் உரிமைக் குழுவின் அங்கமான நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் அந்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ ஆய்வு, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை, சாகர்மாலா உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக, நாளை ஏப்ரல்-12 அன்று தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ.மணியரசன் தலைமையில் கருப்பு கொடியேந்தி சென்னை விமான நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என இன்று (11-04-2018) சேப்பாக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் முத்துப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த்தேசிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மேலும் இயக்குநர் ஐயா பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக இயக்குநர்கள் அமீர், வ.கௌதமன், இராம், வெற்றிமாறன், கோபி நயினார் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

மோடிக்கு எதிரான கருப்புக் கொடி போராட்டம், 12-04-2018 (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெறும். அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள், அனைத்துப்பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம். அனைத்து தாய்த்தமிழ் உறவுகளும் கட்சி கொடிகளைத் தவிர்க்குமாறு அன்புரிமையுடன் கோருகிறோம். இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்த அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டுக்கு வாழ்வாதாரமான காவிரிப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத துரோகம், நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் சமூக நீதியை அழித்த துரோகம், நாசகார நியூட்ரினோ திட்டத்தைத் திணிக்க முற்படும் கொடூரம், காவிரி டெல்டா பிரதேசத்தில் ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் ஆகிய எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அக்கிரமம், தமிழக மீனவர்களுக்குச் செய்யும் துரோகம், நாட்டின் பன்முகத் தன்மையையும், மதச் சார்பற்ற அடித்தளத்தையும் தகர்க்க முற்படும் இந்துத்துவா சக்திகளின் தீய நோக்கத்தைச் செயல்படுத்த முனையும் அராஜகம்,

கர்நாடகத்தில் மேகதாட்டு, ராசி மணலில் அணைகள் கட்டுவதற்கு மறைமுக ஏற்பாடு என்ற விதத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் விரோதமாக செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை எதிர்த்து தமிழக மக்களின் கொந்தளிப்பை உணர்த்தும் வகையில் 2018 ஏப்ரல் 12 ஆம் அன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் சென்னை வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் எனது தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகக் கண்மணிகள் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் இந்த அறப்போரில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.

திமுக சார்பிலும் விமான நிலையம் பகுதியில் கருப்புக் கொடி போராட்டம் நடக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close