மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வரும் பிரதமர் மோடி, ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக 218 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்ட மத்திய அமைச்சரவை ரூ.1,264 கோடி ஒதுக் கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்ததாரரை முடிவு செய்தல், மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ளும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜன.27-ல் மதுரை வர இருப்பதாக தெரிகிறது. அன்றைய தினம் பாஜக மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மதுரையில் நடக்கிறது. இதில் பிரதமர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகைத் தரும் பிரதமரை வரவேற்று மதுரையில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன.
மருத்துவமனை அமைய உள்ள 218 ஏக்கரும் திறந்த வெளியாகவே உள்ளதால், அங்கேயே விழாவை நடத்துவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால், மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் விழா நடக்கும் இடத்துக்கு பிரதமர் வரவும், இதற்காக ஹெலிகாப்டர் தளத்தை தோப்பூர் காசநோய் மருத்துமவனை வளாகத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மதுரை- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் வரையில் புதிய சாலை அமைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.
மதுரை வரும் பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு மதுரையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நேரடியாகவும், இதேப்போன்று திருநெல்வேலியில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகம் வரும் போது, ரஜினிகாந்தை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாஜக தரப்பில் இருந்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Narendra modi to meet rajini