/tamil-ie/media/media_files/uploads/2018/03/1-27.jpg)
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் திராவிடர் இயக்க வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு இன்று அவரின் சொந்த ஊரான தஞ்சாவூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சசிகலாவின் கணவரும், 'புதியபார்வை' இதழின் ஆசிரியருமான நடராஜன் உடல் நலக்குறைவால் நேற்று(20.3.18) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.
கடந்த அக்டோபர் மாதம், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவருடைய சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழந்ததால், உடனடியாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த 16ஆம் தேதியன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்படவே தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.
இந்நிலையில், அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு நடராஜனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின், வைகோ, கிருஷ்ணசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பின்பு அவரின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு ஆம்புலனிஸில் உடல் கொண்டு செல்லப்பட்டது.
கணவர் நடராஜனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பெங்களூரில் இருந்து சசிகலா தஞ்சாவூர் சென்றடைந்தார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு நடராஜன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.திராவிடர் இயக்க வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.