தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின், திறமை விரைவில் தேசிய கட்டமைப்புக்கு, பா.ஜ.க பயன்படுத்தும் என்று அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்திலர் ஐ.பி.எஸ். ஆபீஸராக இருந்தவர் அண்ணாமலை. ஒரு கட்டத்தில் அரசியல் ஆர்வத்தின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதால், தமிழக பா.ஜ.க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலை தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். அதன்பிறகு மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தன்னால் முடிந்த பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த அண்ணாமலை, கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். மேலும், சட்டசபை தேர்தல் தொடர்பான அ.தி.மு.க பா.ஜ.க இடையே மோதலும் வெடித்தது.
இதன் காரணமாக பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அதிரடியாக அறிவித்த நிலையல், இடையில் அரசியல் படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றிருந்தார். இதனிடையே, தற்போது 2026 சட்டசபை தேர்தலில், அதிமுக – பா.ஜக. இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வந்தது. அதேபோல் தேர்தல் போட்டியில் தான் இல்லை என்றும் அண்ணாமலை தெளிவுபடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் அவர்களிடமிருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.