காஞ்சிப்புரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, 2015 ஆண்டு முதல் சிறந்த நெசவாளர்களுக்கு, தேசிய விருதையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் 2016 ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும், சிறந்த நெசவாளர்களுக்கான தேசிய தரச்சான்றிதழும், இரு நெசவாளர்களுக்கு 2016 ஆண்டின் சிறந்த நெசவாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதுக்கு, நாடு முழுவதும், 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த கே.மகேஸ்வரி என்ற பெண் சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவருக்கு விருதுடன் 1.5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, பி.பார்வதி மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த தனியார் நெசவாளர், ஆர்.வரதன் ஆகியோர் சிறந்த வடிவமைப்புக்கான தேசிய தரச்சான்றிதழ் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் முதன் முறையாக கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.
இந்த விருதுக் குறித்து பேசிய நெசவாளர் சேவை மைய துணை இயக்குனர், த.கார்த்திகேயன், தேசிய விருதுக்கு தமிழக நெசவாளர்கள் தேர்வாகியிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.