சேலம் மாவட்டத்தில் உள்ள கோவிலில் நுழைந்த பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டியதால் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, டிஜிபி உட்பட ஐந்து பேருக்கு முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டின் அரசு தலைமைச் செயலாளர் வருகைதர வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேற்கு வட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின், அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரவீன் என்பவர் கோவிலுக்குள் வழிபடச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்தக் கோவிலுக்குள் வரமாட்டோம் என அங்கு வசிக்கும் ஆதிக்க சமூகத்தினர் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட்ட சேலம் மாவட்ட திமுக தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரான டி.மாணிக்கம், அந்தப் பட்டியலின இளைஞரை ஊர் மக்கள் முன்னிலையில் எச்சரித்தார்.
இளைஞர் பிரவீனை ஆபாசமாகத் திட்டி மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டி.மாணிக்கத்தை திமுக இடைநீக்கம் செய்து கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், 7 நாட்களுக்குள் தங்களுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை இயக்குநர், சேலம் மாவட்ட ஆணையர், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டிற்கு உத்தரவிட்டுள்ளது.