தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1-ம் நாள், தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். இது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டாட்ட நாளாக அமையப் போகிறது.
ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து இந்தியாவில் தலைசிறந்த முதல்வர்களில் தலைச் சிறந்தவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்பதைப் பார்த்து நித்தமும் நான் வியந்து நிற்கிறேன். இளம் வயதில் துள்ளித் திரிந்து 'முரசொலி' நாளிதழ் பணிகளைச் செய்து வந்தார். இளைஞரணியை உருவாக்கிய காலத்தில் அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார். துணைபொது செயலாளராக- பொருளாளராக - செயல் தலைவராக உயர்ந்து இன்று கழகத்தின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்த உழைப்பைக் கூட நேரகாலம் பார்க்காமல் எல்லாப் பொழுதும் அவர் ஆற்றி வந்த காரணத்தால் தான் அவர் அடைந்த வெற்றிகள் அனைத்தும் யாராலும் தொட முடியாத வெற்றியாக அமைந்திருந்தன. தலைமை கழகத்தின் சார்பில், மார்ச் 1 மாலை 5.00 மணி அளவில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவுக்கு தலைமை வகிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கழகப் பொருளாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள். அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வருகை தர உள்ளனர். இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் இந்த கூட்டம் அமையப் போகிறது. இந்தியாவின் புதிய விடியலுக்கான பிறந்தநாளாகவும் அமையப் போகிறது" என்று கூறியுள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.