சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தலைமை செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக இருப்பவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், குழந்தைகள் திருமண சட்டத்தின் படி இது தவறானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கடலூர் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பான விசாரணையில், குழந்தை திருமணம் செய்ததாக 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சில குழந்தை திருமணங்கள் நடந்தாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த குழந்தை திருமணம் மற்றும் தீட்சிதர்கள் கைது நடவடிக்கை அனைத்துமே பொய்யான வழக்கு என்று ஆளுனர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த ஆளுனர் ஆர்.என்.ரவி, சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் படி 6, 7-ம் வகுப்பு மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் ஆளுனர் தெரிவித்திருந்தார்.
மேலும் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட சோதனையை மேற்கொள்வது குழந்தைகள் உரிமை மீறல் என்றும் கூறிய ஆளுனரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், சிதம்பரம் தீட்சிதர்கள் மத்தியில் ஆளுனரின் பேச்சுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் கோவிலை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுனரின் இந்த பேட்டியை வைத்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து இது குறித்து விளக்கம் கேட்டு தலைமை செயலாளர் இறையன்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகள் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சமூக நலத்துறை சார்பில் அளித்த புகார்கள் குறித்து விபரங்கள் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“