கோவை பாஜக அலுவலகத்தின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகரில் கடந்த 22-ம் தேதி வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 32), அகமது சிகாபுதின் (வயது 24) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர்.
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோவை மாநகர பாஜக அலுவலகத்தின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படி வியாழக்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"