மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கலை கைவிடுதல், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிடுதல் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை 8.5%ல் இருந்து 8.1% ஆக குறைத்தது, பெட்ரோ, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இந்த போராட்டத்திற்கு வலுவான காரணங்களை சேர்த்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
சம்யுக்த கிஷான் மோர்ச்சா உள்ளிட்ட பல விவசாய சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக அரசுக்கு எதிராக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று திமுக பொதுச் செயலாளார் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போக்குவரத்துதுறை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும். எனவே பணிக்கு வருகை தரவில்லை என்றால், வருகைப் பதிவில் குறித்து வைக்கப்பட்டு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சாலை, பொது போக்குவரத்து துறை, மின்சார ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள், உள்ளிட்டோரும், 8 முக்கியத்துறையைச் சார்ந்த தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “