கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஜெர்மன் நாட்டுடன் இணைந்து பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் அதற்கான இழப்பீடு தொடர்பாக கூட்டு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது, “பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள், பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலமாகவும், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை திரட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க முடியும். காலநிலை மாற்றம் காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
இந்த பயிர் பாதுகாப்பு திட்டங்கள் – தனிநபர் விவசாயத்திற்கும் உதவுயாக இருக்கும். மண், தண்ணீர், பயிர் நிலை குறித்த தகவல்கள் தொலைப்பேசி வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால நிலைக்கு ஏற்றார் போல் பயிர்காப்பீடு செய்வது எப்படி என்பதை ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை கையாள்வது எப்படி மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்த திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

தண்ணீர் குறைத்து அதிக மகசூல் பெறும் வகையில் ஆராய்ச்சி செய்யப்படும். கிராமம், வட்டாரம் என ஒப்பீடு செய்து நிவாரணம் வழங்கபட்டு வருகிறது. இதேபோல் இதற்கென புதிய திட்டங்கள் வகுக்கப்படும். சிறு,குறு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உபகரணங்கள் தயார் செய்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 100 எப்.பி.ஓவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். 1000 விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து அவர்களின் தேவைகளை அறிந்து திட்டமிட்டுள்ளோம்.
இதுவரை ரூ.6 கோடி ரூபாய் ஜெர்மனி கூட்டு ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் ஜெர்மனி அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் ஆராய்ச்சி பணிகள் நடத்தபட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil