ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை வரும் 23,24-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதோடு வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. இதையொட்டு பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி தொலைதூரங்களுக்குச் செல்ல தென்னக ரயில்வேயும் தொடர் விடுமுறையொட்டி சிறப்பு ரயில் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி, திருநெல்வேலி-தாம்பரம் மற்றும் சென்னை சென்டிரல்-மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு அதிகமாகும் எனத் தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் டூ சென்னை எழும்பூர்
அதே போல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் டூ சென்னை எழும்பூருக்கு கூடுதல் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 24-ம் தேதி இரவு 7.35மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு 25-ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மீண்டும் அதே நாள் சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இதில் முதலாம் வகுப்பு படுக்கை வசதி, ஏ.சி மற்றும் சாதாரண வகுப்பு பெட்டி, சேர் கார் உள்ளிட்ட 21 பெட்டிகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து அதிக அளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதனால் சென்னை கோயம்பேட்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் சென்னையின் பல்வேறு இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் உருவாக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று, இன்று (21-ம் தேதி), நாளை(22-ம் தேதி) ஞாயிற்றுக் கிழமை வரை சில ஊர்களுக்குச் செல்ல பேருந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் தாம்பரம் மெப்ஸ் பஸ் நிறுத்தம் அருகே இருந்து இயக்கப்படும்.
இதேபோன்று வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் இருந்து இயக்கப்படும். இதுதவிர பிற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“