ஆன்மீகமா? ஆன்மீக அரசியலா? - நயன்தாராவை துரத்தும் அரசியல் சர்ச்சை

சமீபத்திய நயன்தாராவின் ஆன்மீக பயணங்கள், வழக்கம் போல் சமூக தளங்களில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளை எழுப்பியுள்ளது. அடிப்படையில் கிறிஸ்துவரான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் தொடங்கிய பிறகு சிங்கிள் ஹேண்ட் படங்களில் மட்டுமே அதிகம் நடித்து வருகிறார். ஹீரோக்களுடன் டூயட் பாடுவதை வெகுவாக குறைத்துவிட்டு, லீட் ரோல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

சூப்பர் ஹிட், ஹிட், பிளாப் என்று முடிவு என்னவாக இருந்தாலும், கொண்டாடப்படுவது என்னவோ நயன்தாரா தான். சும்மாவா லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்கிறார்கள். சரி கான்செப்ட்டுக்கு வருவோம்.


சமீக காலமாக அவர் தனது காதலர் சிவனுடன் அதிகம் கோவில்களுக்கு சென்று வருவதை நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். காஞ்சிபுரத்தை அதிரவைத்த அத்திவரதரை விவிஐபிக்களே பார்க்க கியூவில் நின்றுக் கொண்டிருந்த போது, சத்தம் போடாமல் காதலருடன் சென்று தரிசனம் செய்தார்.

அதேபோல் அடிக்கடி திருப்பதி செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்தாரா.

நேற்று கூட கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று காதலனுடன் அம்மனை தரிசித்தார். நயனை பார்க்க மக்கள் அலைமோத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கோவிலில் இருந்து அவரை பத்திரமாக அப்புறப்படுத்துவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

இந்த நிலையில், இன்று திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலுக்கு நயன்தாரா வந்திருந்தார். முருகனை தரிசிக்கவும் சில முக்கிய பூஜைகளில் கலந்துகொள்வதற்காகவும் வந்திருந்த நயனுக்கு, கோவில் குருக்கள் மரியாதை அளித்தனர்.

ஒருபக்கம் நயன்தாரா ஆன்மீக பயணத்தில் தீவிரமாக இருக்க, மறுபக்கம் அவர் பாஜகவில் இணையப் போகிறார் என்ற செய்தியும் வலம் வந்து கொண்டே இருந்தன. சரி, இருக்குமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அரசியலில் ரஜினி கட்சியுடன் நயன்தாரா இணையப் போகிறார் என்றும் செய்திகள் அள்ளித் தெளிக்கப்பட்டன.

இடியே இடித்தாலும் வாயைத் திறக்காத நயன்தாரா, இது போன்ற காற்றின் கீதங்களுக்கெல்லாம் அசைந்து கொடுப்பாரா என்ன!?. ஆனால், அவரது ஆன்மீக ட்ரிப் மட்டும் நிற்கவில்லை.

 இந்தச் சூழ்நிலையில் தான், நயனின் திருச்செந்தூர் பயணம் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. அதாவது, கோவிலில் நயன்தாரா பூஜையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு எதேச்சையாக மற்றொரு பூஜைக்கு பாஜக பிரமுகரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் வந்திருக்கிறார். நயன்தாராவைப் பார்த்தவுடன், தன்னை அறிமுகம் செய்து கொண்ட நரசிம்மன், “உங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். உங்களுக்கான சிறந்த கட்சி பாஜக தான். பாஜகவில் இணைந்த திரைபிரபலங்களுக்கு உரிய மரியாதையை பாஜக தரும். சினிமாவின் புகழை வெறும் நடிப்பு என்பதோடு நிறுத்தி விடாதீர்கள். அந்த புகழை வைத்து சமூகத்தின் நலன்களுக்காகப் பாடுபட வேண்டும். அதனால் அரசியலுக்கு வர வேண்டும்” என வலியுறுத்தி இருக்கிறார்.

அதற்கு “சூழல் அமையும் போது உங்களிடம் பேசுகிறேன்” என்ற நயன்தாரா, சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த பூஜைக்குப் பிறகு கோவிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

இப்படியாக நயனைச் சுற்றி அரசியல் தூண்டில் போட்டுப் பார்க்கப்படும் சூழலில், அவர் இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு ஏன் வந்தார் என்று விசாரித்தால், சில சுவாரஸ்ய தகவலும் கிடைத்துள்ளன.

அதாவது, எல்கேஜி படத்துக்கு பிறகு, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மனாக காட்சி தந்து கொண்டிருப்பவர் நயன் என்று ஊருக்கே தெரியும்.

நாகர்கோவிலில் தங்கி ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடித்துவரும் நயன்தாராவுக்கு அம்மன் கேரக்டரில் நடிக்கும்போது, தான் எப்படி இருக்கவேண்டும் என்பதில் சில சந்தேகங்கள் இருந்திருக்கின்றன. இதுகுறித்து தெளிவான விளக்கங்களை யாரும் கொடுக்கவில்லை என்பதால், நானே சென்று நேரில் பார்த்துக்கொள்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார். திருச்செந்தூர் கோவிலில் இருக்கும் பழமையான சிலைகளையும், கன்னியாகுமரி பகவதியம்மனின் தோற்றத்தையும் பார்த்து குறிப்புகள் எடுப்பதற்காகவே நயன்தாரா அங்கு சென்றாராம்.

பகவதி அம்மன் கோவிலில், கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாக பகவதியம்மனைப் பார்த்துக் கொண்டே நின்ற நயன் சில குறிப்புகளையும் அப்போது எடுத்திருக்கிறார். அம்மனை அவர் தீர்க்கமான பார்த்துக் கொண்டிருந்த போது, காதலன் விக்னேஷ் சிவனே அவரை சகஜ நிலைக்கு கொண்டு வர தயங்கி நின்றாராம். பிறகு, அங்கு பாதுகாப்பு பணியில் அவருடன் நின்ற பெண் போலீசாரின் கோரிக்கையை ஏற்று புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார் நயன்.

சினிமா மீதுள்ள டெடிகேஷன் காரணமாக நயன் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார் என்றாலும், அவரது இதர கோவில் விஜயங்கள் குறித்து கண், மூக்கு, காது வைத்தே செய்திகள் பரவுகின்றன.

ஒருவேளை அந்த மூக்குத்தி அம்மனின் அருளால் நயன்தாரா அரசியலில் குதித்தால் அவரும் ஆன்மீக அரசியலில் ஈடுபடுவாரோ!!

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close