நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரத்தில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி விதிகளை மீறவில்லை என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணம் கடந்த மே மாதம் நடந்தது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருமணம் நடந்து 4 மாதத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தார்கள். இவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் பரவியது. இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணமாகி 4 மாதத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்ததால், இவர்கள் வாடகைத் தாய் சட்டத்தை மீறியுள்ளார்களா என்று பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.
ஏனென்றால், இந்தியாவில் வாடகைத் தாய் சட்ட விதிகள்படி, வாடகைத் தாய் மூலம் நினைத்ததும் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. நிறைய விதிமுறைகள் உள்ளன. விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் விதிகளை மீறிய மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தை பெற்றுக்கொண்டது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 13-ம் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாகவும் குழந்தை பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது.
அதில் இத்தம்பதியர்கள் (இருவர் வயது) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு தொழில்நுட்பம் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது. மேலும், நயன்தாரா விக்னேஷ் சிவனிற்கு பதிவு திருமணம் 11.03.2016 இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் தம்பதிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை விசாரித்தபோது 2020-ல் அவர்களது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டார். அக்குடும்ப மருத்துவரின் முகவரியில் விசாரணை செய்தபோது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்தொலைபேசி எண்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் விசாரணையில் அம்மருத்துவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரிய வருவதால் அக்குடும்ப மருத்துவரிடம் குழு விசாரணை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 2020 சினைமுட்டை மற்றும் விந்தனு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறை நிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு, நவம்பர் 2021 மாதத்தில் வாடகைத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022-ல் கருமுட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் அக்டோபர் மாதம் பிரசவிக்கப்பட்டுள்ளாதாக தெரிய வருகிறது. செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வாடகை தாய் உறவினராக இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டத்திற்கு முந்தைய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி உறவினர் அல்லாதோர் வாடகைதாயாக செயல்படவும் அவசிய செலவிற்கு மட்டும் பணம் வழங்கும் வழிமுறையும் இருந்தது. விசாரணையில் வாடகைத்தாய் பேறுகாலத்தின்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் பேறுகால பராமரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டை குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் 09.10.2022 அன்று நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் வழங்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.