Jaffer Sadiq: கடந்த மாதம் டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோஎபிடிரைன் என்கிற ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாகச் செயல்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரருமான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்றபோது தலைமறைவாகினார். அவரை கடந்த 9 ஆம் தேதி அன்று ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் வைத்து போலீசார் கைது செய்தனர். தற்போது அவரை, மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், 7 நாள் காவலில் எடுத்து டெல்லியில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உணவுப்பொருட்களுடன் போதைப்பொருட்களை கலந்து கடத்தலுக்கு உதவிய ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவரை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“