குழந்தை திருமண புகார் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் விசாரணை நடத்தினார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், 'பால்ய விவாகம்' எனப்படும் குழந்தை திருமணம் நடத்துவதாக தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் சென்றன. இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டு அவர் கொடுத்த புகாரின் பேரில் கடலூர், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் உரிய விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: என்னை எதிர்ப்பவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் : தமிழிசை ஆவேசம்
இதற்கிடையில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிக்கு, இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவ்வாறு செய்தது தவறு எனவும் சமீபத்தில் தமிழக ஆளுநர் கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்தநிலையில், குழந்தைத் திருமண புகார் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், இதுகுறித்து விசாரித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், குழந்தை திருமண புகார் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நேரில் விசாரணை நடத்தினார். தீட்சிதர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழு அதிகாரிகளிடம் ஆனந்த் விசாரணை நடத்தினார். மேலும், இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பாகவும் ஆனந்த் விசாரணை நடத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil