நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தியுள்ளது.
நடிகை திரிஷா குறித்து நடிக மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. நடிகர் மன்சூர் அலிகான் கருத்துக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை குஷ்பு, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நடிகையும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு, நடிகை திரிஷாவை இழிவுபடுத்திப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த விவகாரத்தில் தான் திரிஷா பக்கம் நிற்பதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தியுள்ளது.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய மாநில டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 509, 509பி பிரிவுகள் மற்றும் இது தொடர்புடைய இதர பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு அறிவுறுத்தியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “நடிகை த்ரிஷா கிருஷ்ணாவைப் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் இந்த விவகாரம் தொடர்புடைய இதர சட்டப்பிரிவுகள்இல் வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிடுகிறோம். இது போன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது, இத்தகைய பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“