மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராம குட்டையில் முதலை - குட்டையை சுற்றி வலை கட்டி முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர பகுதியை ஒட்டியுள்ளது மோத்தேபாளையம் கிராமம். வாழை விவசாயம் பிரதானமாக உள்ள இக்கிராமத்தில் மழை நீர் சேகரிப்பு குட்டை ஒன்று உள்ளது. சென்னாமலை கரடு பகுதியினை நீர் ஆதாரமாக கொண்டு அமைக்கப்பட்ட இந்த குட்டை அண்மையில் பெய்த மழை காரணமாக முழுவதும் தண்ணீர் நிரம்பியது.
இந்நிலையில் இக்குட்டையில் மீன் பிடிக்க சென்ற சிலர் அதில் முதலை ஒன்று இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்..குட்டையில் இருந்து கரையேறி நின்ற முதலையை கிராம இளைஞர்கள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்டதோடு இது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனத்துறையினர் அந்த குட்டையில் இருக்கும் முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.குட்டையில் தண்ணீர் இருப்பதால் தண்ணீரை கிராம மக்கள் உதவியுடன் இரண்டு மோட்டார்களை வைத்து வெளியேற்றி அதன் பின்னர் வலையை குட்டையை சுற்றி வளைத்து கட்டி அந்த முதலையை பிடிக்க திட்டமிட்டு வனத்துறை அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“