scorecardresearch

சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியே தேவை : உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து

சுற்றுச் சூழலை பாதிக்காத நிலையான வளர்ச்சியே இன்று தேவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியே தேவை : உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து

சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியே தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா மாணிக்கவாசகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.. ‘சென்னை அண்ணாசாலை, ஸ்மித் தெருவில் வணிக வளாக கட்டிடம் கட்டினேன். விதிமுறைகளின்படி, மொத்த இடத்தில் 10 சதவீத நிலத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, திறந்த வழி நிலமாக (ஓ.எஸ்.ஆர்.நிலமாக) மாநகராட்சியிடம் வழங்கவேண்டும். அதன்படி, 100 சதுர மீட்டர் நிலத்தை மாநகராட்சிக்கு வழங்கினேன்.

ஆனால், இந்த நிலத்தை மாநகராட்சி முறையாக பராமரிக்காததால், குப்பைகள் கொட்டப்படுவதால், எந்நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த நிலத்தில் மரம், செடி வைத்து பராமரிக்க விரும்புகிறேன். அதற்காக நிலத்தை என்னிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். அந்த நிலத்தில் கட்டிடங்கள் எதுவும் கட்ட மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்து வாதிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மாநகராட்சி வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடுவது போல குப்பைகள் கொட்டப்படவில்லை என்றும் அந்த நிலத்தை சுத்தமாக பராமரிக்கப்படுவதாகவும் கூறி, சில புகைப்படங்களை தாக்கல் செய்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் இந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் அசிங்கமான நிலையில் கிடந்த நிலத்தை சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்து தாக்கல் செய்துள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.

மேலும், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர். நிலத்தை திருப்பி ஒப்படைப்பது என்பது சாத்தியமில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மனுதாரர் அந்த நிலத்தில் கட்டுமானம் எதையும் மேற்கொள்ள மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். அந்த நிலத்தில் செடிகள், மரங்களை வைத்து பூங்காவை உருவாக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நிலத்தை பராமரிக்க அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிடுகிறேன்.

மேலும், இந்த வழக்கை முடிப்பதற்கு முன்பு சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறன். சுற்றுச்சூழல் சீரழிவு, புவி வெப்பமடைதல் ஆகியவை இந்த உலகிற்கு பேரழிவை தரக்கூடிய விதமாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, இந்த நிலங்களை அரசு முறையாக பராமரிக்க வேண்டும்.

நம் முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் எல்லாம் பொய்யானவை இல்லை. அவை அறவியல் ரீதியானது. நம் முன்னோர்கள் இயற்கையையும், மரங்களையும் தெய்வமாக வணங்கினர். தெய் வழிப்பாட்டில் மாற்றுக்கருத்து இல்லாததால், இயற்கை வளங்கள் அப்போது காப்பாற்றப்பட்டன.

இப்போது கூட சிலர் நிலம், நெருப்பு, நீர், ஆகாயம், காற்று ஆகிய பஞ்சபூதங்களை தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆனால், பகுத்தறிவு என்ற பெயரில், மத ரீதியான நடவடிக்கைகளை மூடநம்பிக்கை என்றோம். மத கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டோம். இப்போது இயற்றை அழிக்கப்பட்டு கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். நம் முன்னோர்கள் சொல்லித் தந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றினால் இந்த இயற்கை பேரழிவுகளை தடுக்க முடியும்.

நிலங்களில் மரம் வளர்த்தால், மண் வளம் பெறும். நமக்கு சுத்தமான பிராணவாயு கிடைக்கும். காற்று மாசு குறைக்கப்படும். அதேநேரம், இதுபோன்ற திறந்த வெளி நிலங்களில், மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கும் பயன்படுத்தவேண்டும். சமுதாய முன்னேற்றம் என்பது இயற்கை வளங்களை அழிக்கும் விதமாக இருக்கக்கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்காத நிலையான வளர்ச்சியே தற்போது தேவை என கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Need development without disturbing ecology madras high court judge s vaidyanathan